நிலக்கோட்டை அருகே ஆஞ்சநேயர் கோவிலில் வேரோடு சாய்ந்த அரசமரம் - 4 பெண்கள் படுகாயம்


நிலக்கோட்டை அருகே ஆஞ்சநேயர் கோவிலில் வேரோடு சாய்ந்த அரசமரம் - 4 பெண்கள் படுகாயம்
x
தினத்தந்தி 15 Dec 2018 11:00 PM GMT (Updated: 15 Dec 2018 9:43 PM GMT)

நிலக்கோட்டை அருகே உள்ள அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் அரசமரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் 4 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

நிலக்கோட்டை,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள அணைப்பட்டியில் வைகை ஆற்றங்கரையோரத்தில் வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு, முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக தினமும் ஏராளமான பக்தர் கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக வெள்ளி, சனிக்கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும்.

இந்தநிலையில் நேற்று மதியம் சுமார் 12 மணியளவில், வீரஆஞ்சநேயர் கோவில் பகுதியில் உள்ள கருப்புச்சாமி கோவில் முன்பு இருந்த பழமையான ராட்சத அரசமரம் திடீரென வேரோடு சாய்ந்தது. இதைக்கண்ட பக்தர்கள், அலறியடித்து நாலாபுறமும் ஓட்டம் பிடித்தனர்.

இதற்கிடையே அந்த மரம் அங்குள்ள கடை மீது விழுந்தது. இதில் அந்த கடை சுக்குநூறாக நொறுங்கியது. மேலும் கடை உரிமையாளர் மாரியம்மாள் (வயது 30) சிக்கி கொண்டார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். மேலும் அங்கு நின்று கொண்டிருந்த பக்தர்கள் முத்தம்மாள் (60), ஜெயசுதா (39), லட்சுமி (59) ஆகியோரும் படுகாயம் அடைந்தனர்.

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், முத்தம்மாள் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கேஸ்வரன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்துவிசாரணை நடத்தினர்.


Next Story