விற்பனைக்கு தடை எதிரொலி: சமயபுரம் ஆட்டுச்சந்தையில் அதிகாரிகள்-வியாபாரிகள் வாக்குவாதம்


விற்பனைக்கு தடை எதிரொலி: சமயபுரம் ஆட்டுச்சந்தையில் அதிகாரிகள்-வியாபாரிகள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 15 Dec 2018 11:00 PM GMT (Updated: 15 Dec 2018 9:46 PM GMT)

திருச்சி மாவட்ட சந்தைகளில் ஆடு, மாடுகள் விற்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சமயபுரம் ஆட்டு சந்தையில் நேற்று அதிகாரிகளுக்கும், வியாபாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சமயபுரம்,

திருச்சி மாவட்டத்தில் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தைகளுள் ஒன்று, சமயபுரம் ஒத்தக்கடையில் உள்ள ஆட்டுச்சந்தை. இங்கு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைதோறும் நடைபெறும் சந்தைக்கு ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்திருந்து ஆடுகளை மொத்தமாக வாங்கி செல்வார்கள்.

வழக்கம்போல நேற்று காலை 5 மணியளவில் சந்தை கூடியது. ஆடுகளை வாங்க வியாபாரிகள் சரக்கு ஆட்டோ உள்பட ஏராளமான வாகனங்களில் வந்திருந்தனர். கோமாரிநோய் தாக்குதல் காரணமாக சமயபுரம், மணப்பாறை உள்பட வாரச்சந்தைகளில் ஆடு, மாடுகள் விற்பனை செய்ய மாவட்ட கலெக்டர் ராஜாமணி தற்காலிக தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி, ச.கண்ணனூர் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பாக தடை உத்தரவுக்கான பெயர் பலகை ஆட்டுச்சந்தையில் வைக்கப்பட்டிருந்தது. இதுபற்றி தெரியாத வெளி மாவட்ட வியாபாரிகளும், விவசாயிகளும் நேற்று காலை ஆடுகளுடன் விற்பனைக்காக வந்திருந்தனர். இதையடுத்து ச.கண்ணனூர் பேரூராட்சி தலைமை எழுத்தர் சதீஷ்கிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் மலையப்பன் மற்றும் பணியாளர்கள் சந்தைக்கு சென்று வியாபாரம் செய்ய கூடாது என்று கலெக்டரின் உத்தரவை எடுத்து கூறினர்.

அப்போது வியாபாரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வியாபாரிகளிடம் விவரத்தை எடுத்து சொல்லி அவர்களை சமாதானப்படுத்தினர். இதை தொடர்ந்து அவர்கள் கொண்டு வந்த ஆடுகளை விற்பனை செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் வாகனங்களில் ஏற்றி சென்றனர். 

Next Story