ரூ.128 கோடியில் கட்டி முடிக்கப்பட்டது: பார்வதிபுரம் மேம்பாலத்தை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்


ரூ.128 கோடியில் கட்டி முடிக்கப்பட்டது: பார்வதிபுரம் மேம்பாலத்தை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்
x
தினத்தந்தி 15 Dec 2018 11:00 PM GMT (Updated: 15 Dec 2018 9:58 PM GMT)

ரூ.128 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட பார்வதிபுரம் மேம்பாலத்தை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். இந்த மேம்பாலம் 19-ந் தேதி திறக்கப்படுகிறது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக ரூ.128 கோடியில் பார்வதிபுரத்தில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது. ‘ஒய்’ வடிவில் உள்ள இந்த மேம்பாலம் 1,764 மீட்டர் நீளம் கொண்டது. மொத்தம் 100 தூண்கள் எழுப்பப்பட்டு பிரம்மாண்டமாக காட்சி அளிக்கிறது. இந்த பாலம் விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.

பாலம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு பொதுமக்கள் பாலத்தின் மேல் சென்று பார்வையிட மிகுந்த சிரமப்படுவார்கள். எனவே பொதுமக்கள் பார்வையிடும் வகையில் நேற்று மாலை மேம்பாலம் திறக்கப்பட்டது. மாலை 4 மணிக்குத்தான் பாலம் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் 3 மணிக்கே மக்கள் பாலத்தின் அருகில் திரண்டனர். தொடர்ந்து பாலத்தில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டதும் ஆண்களும், பெண்களும் சாரை சாரையாக பாலத்தில் செல்ல தொடங்கினர்.

பார்வதிபுரம் மின்வாரிய அலுவலகம் முன்பு இருந்தும், பால் பண்ணை அருகில் இருந்தும் மக்கள் பாலத்தில் ஏற தொடங்கினார்கள். சிலர் பார்வதிபுரம் பஸ் நிறுத்தம் அருகில் இருந்து பாலத்தில் ஏறினர். மக்கள் வருகையையொட்டி பாலத்தில் வண்ண வண்ண விளக்குகள் தொங்கவிடப்பட்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அதோடு போக்குவரத்து விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட பதாகைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டு இருந்தன. மேம்பாலத்தை பார்வையிட வந்த மக்களுக்கு வரவேற்பு ஆர்ச் வைத்தும், மேள தாளங்கள் முழங்கவும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் பாலத்தின் மேல் 2 இடங்களில் கரகாட்டம் நடந்தது. இதை மக்கள் பார்த்து ரசித்தனர். பாட்டு கச்சேரி, நடன நிகழ்ச்சி, செண்டை மேளம், பேன்ட் வாத்தியம் உள்ளிட்டவையும் கோலாகலமாக நடந்தன. கரகாட்டம் மற்றும் நடன நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

முதலில் பாலத்தை பார்வையிட குறைவான மக்களே வந்திருந்தனர். மாலை 5 மணிக்கு பிறகு அதிகப்படியான மக்கள் பாலத்தை பார்வையிட திரண்டனர். குடும்பம் குடும்பமாக மக்கள் வரத் தொடங்கினார்கள். அதாவது பாலத்தில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் இருந்தது. மேம்பாலத்தில் ஏறிய மக்கள் அனைவரும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேம்பாலத்தில் இருந்து பார்க்கும்போது தென்னை மற்றும் பலா மரங்கள் தென்படுகின்றன. இந்த இயற்கை எழில் கொஞ்சும் காட்சியை மக்கள் பார்த்து ரசித்தனர். புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

மேம்பாலத்தை பார்வையிட வந்த மக்களுக்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் சார்பில் திண்பண்டங்கள் வழங்கப்பட்டன. அதாவது கடலை, பூந்தி, கொய்யா மற்றும் ஆரஞ்சு பழம், காப்பி, வாழை பழம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. மேலும் தண்ணீர் பாக்கெட்டுகள் மற்றும் ஜூஸ் ஆகியனவும் வழங்கப்பட்டது. குறிப்பாக பெண்களுக்கு ரோஜா பூ கொடுக்கப்பட்டது. மரக்கன்றுகள், கீரை விதைகளையும் வழங்கினார்கள்.

மக்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு மேம்பாலம் மற்றும் மக்கள் வரும் வழிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் தீ விபத்து ஏதேனும் நடந்தால் அதை துரிதமாக அணைக்க தீயணைப்பு வாகனங்களும் பாலத்தின் கீழ் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தன.

மேம்பாலம் மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டதையொட்டி நாகர்கோவிலில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேம்பாலத்தை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும் நேரில் வந்து பார்வையிட்டார்.

Next Story