மொடக்குறிச்சி அருகே அனுமதியின்றி முதியோர் இல்லம் தப்பி ஓடிய தந்தை- மகளுக்கு வலைவீச்சு


மொடக்குறிச்சி அருகே அனுமதியின்றி முதியோர் இல்லம்  தப்பி ஓடிய தந்தை- மகளுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 15 Dec 2018 11:15 PM GMT (Updated: 15 Dec 2018 11:15 PM GMT)

மொடக்குறிச்சி அருகே அனுமதியின்றி முதியோர் இல்லம் நடத்திய தந்தை- மகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மொடக்குறிச்சி,

மொடக்குறிச்சி அருகே உள்ள சின்னியம்பாளையம் பாரதி நகரை சேர்ந்தவர் அமானுல்லா. இவருடைய மகள் ஆயிஷா சுல்தானா. இவர்கள் 2 பேரும் அந்தப்பகுதியில் ‘அன்பு இல்லம்’ என்ற பெயரில் முதியோர் இல்லம் நடத்தினார்கள். இந்த முதியோர் இல்லம் அனுமதியின்றி நடத்தப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் முதியோர் இல்லத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்று மொடக்குறிச்சி போலீசார் மற்றும் சமூக நல பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அந்த முதியோர் இல்லத்தில் ஆய்வு நடத்தினார்கள். அப்போது முதியோர் இல்லம் அனுமதியின்றி செயல்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த இல்லம் இடித்து அகற்றப்பட்டது.

இந்த நிலையில் அமானுல்லா மற்றும் அவருடைய மகள் ஆயிஷா சுல்தானா ஆகியோர் மீண்டும் முதியோர் இல்லம் நடத்த மொடக்குறிச்சி தாசில்தாரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். ஆனால் தாசில்தார் அந்த மனுவை நிராகரித்தார். இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் அனுமதியின்றி மொடக்குறிச்சி அருகே உள்ள சின்னியம்பாளையம் பகுதியில் அன்னை இல்லம் என்ற பெயரில் புதிதாக முதியோர் இல்லம் தொடங்கினார்கள். மேலும் அந்த இல்லத்தில் முதியோர்களையும் சேர்த்தனர்.

அந்த இல்லத்தில் சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் தன்னுடைய தந்தையை கடந்த சில தினங்களுக்கு முன்பு சேர்த்தார். அப்போது அவரிடம், இல்ல நிர்வாகிகள் அமானுல்லா மற்றும் ஆயிஷா சுல்தானா ஆகியோர் ரூ.5 ஆயிரம் வாங்கியதாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று தந்தையை பார்க்க ஜெயப்பிரகாஷ் அந்த முதியோர் இல்லத்துக்கு வந்தார். அப்போது ஜெயப்பிரகாசின் தந்தையை இல்ல நிர்வாகிகள் அடித்து துன்புறுத்தியது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயப்பிரகாஷ் தன்னுடைய தந்தையை அழைத்துச்செல்ல முடிவு செய்தார்.

மேலும் இல்ல நிர்வாகிகளிடம் தான் வழங்கிய பணத்தை திரும்ப தரவேண்டும் என்று கூறி உள்ளார். அப்போது அவர்கள் 2 பேரும் பணத்தை திரும்ப தர முடியாது என்று கூறியதோடு, ஜெயப்பிரகாசை தகாத வார்த்தையால் திட்டியதாக தெரிகிறது.

அதனால் இதுகுறித்து ஜெயப்பிரகாஷ், மாவட்ட சமூக நல பாதுகாப்பு அதிகாரி அம்பிகாவிடம் புகார் தெரிவித்தார். மேலும் இதுபற்றி மொடக்குறிச்சி போலீசிலும் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் மாவட்ட சமூக நல பாதுகாப்பு அதிகாரி அம்பிகா மற்றும் போலீசார் மொடக்குறிச்சி அருகே சின்னியம்பாளையத்தில் செயல்பட்டு வந்த முதியோர் இல்லத்தை ஆய்வு செய்தனர். அப்போது அந்த இல்லம் அரசின் அனுமதியின்றி செயல்பட்டது தெரியவந்தது. இதற்கிடையே அந்த இல்லத்துக்கு போலீசார் வரும் தகவல் அறிந்ததும் நிர்வாகிகள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அனுமதியின்றி முதியோர் இல்லம் நடத்திய அமானுல்லா மற்றும் அவருடைய மகள் ஆயிஷா சுல்தானா ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story