புதுவைக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்; இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் வலியுறுத்தல்


புதுவைக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்; இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 16 Dec 2018 5:45 AM IST (Updated: 16 Dec 2018 5:45 AM IST)
t-max-icont-min-icon

புதுவைக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி,

முழுமாநில அந்தஸ்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சலீம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

புதுவை நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் கடந்த 6–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு ஏற்புடையது அல்ல. அது இந்திய கூட்டாட்சி கோட்பாடு, மாநில உரிமை, மக்களின் வாக்களிக்கும் ஜனநாயக உரிமைகளை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. புதுச்சேரி மத்திய அரசின் சொத்து என்பதால், மத்திய அரசு நியமன சட்டபேரவை உறுப்பினர்களை நியமனம் செய்ய உரிமை உண்டு என்றும், அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளிட்ட அனைத்தும் உண்டு என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இது புதுச்சேரி மக்களின் சுயமரியாதையை இழிவுபடுத்துவதாகும். எனவே, புதுச்சேரி மத்திய அரசின் சொத்து என கூறியதை திரும்ப பெற வேண்டும். புதுவைக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்.

நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து புதுவை அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். புதுவையில் போட்டி ஆட்சி நடத்தும் கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானங்களை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் வருகிற 30–ந் தேதி கம்பன் கலையரங்கில் பெரிய அளவிலான கருத்தரங்க கூட்டம் நடைபெறுகிறது. இதில் மாணவர்கள், சிந்தனையாளர்கள், பொதுமக்கள், தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இது தொடர்பாக மக்கள் சந்திப்பு கூட்டங்கள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், இந்திய கம்யூனிஸ்டு(எம்.எல்) மாநில செயலாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் பலர் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story