கண்மாயில் நீர் வற்றியதால் டேங்கர் லாரி தண்ணீர் மூலம் பயிர்களை காப்பாற்றும் விவசாயிகள்


கண்மாயில் நீர் வற்றியதால் டேங்கர் லாரி தண்ணீர் மூலம் பயிர்களை காப்பாற்றும் விவசாயிகள்
x
தினத்தந்தி 16 Dec 2018 6:23 AM IST (Updated: 16 Dec 2018 6:23 AM IST)
t-max-icont-min-icon

இளையான்குடி பகுதியில் கண்மாயில் நீர் வற்றியதால், டேங்கர் லாரி மூலம் தண்ணீர் கொண்டு வந்து பயிரை காப்பாற்றி வரும் விவசாயிகள்.

இளையான்குடி,

சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் வறண்ட மாவட்டமாகவே இருந்து வருகிறது. பொதுவாக இந்த மாவட்டங்களில் ஆண்டுதோறும் பெய்ய வேண்டிய பருவ மழை தரை குளிர பெய்து, கண்மாய்கள் நிரம்பி மறுகால் சென்றால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும் நிலை இருந்து வருகிறது.

இந்தநிலை ஏற்பட்டு சுமார் 15ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் மிதமான மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள் ஓரளவு தண்ணீர் தேங்கி வருவது இயல்பாக இருந்து வருகிறது. இதை பயன்படுத்தி சில விவசாயிகள் தங்களது விளை நிலத்தில் நெற் பயிர்கள் நடவு செய்து, அதன் பின்னர் எப்படியாவது மீண்டும் மழை பெய்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்து வருகின்றனர். இந்த ஆண்டும் மாவட்டத்தில் இளையான்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் கண்மாயில் தேங்கிய ஓரளவு தண்ணீரை கொண்டு நெற்பயிர்கள் நடவு செய்திருந்தனர்.

தற்போது கண்மாயில் தண்ணீர் வற்றியதால், நெற்பயிர்கள் வாடிய நிலையில் உள்ளன. இதை காப்பாற்றுவதற்காக விவசாயிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில விவசாயிகள் அந்த பகுதியில் உள்ள கிணற்று நீரை விலைக்கு வாங்கி பயிர்களை காப்பாற்றி வருகின்றனர். மேலும் சிலர் டேங்கர் லாரிகளில் தண்ணீரை கொண்டு வந்து பயிர்களை காப்பாற்றி வருகின்றனர்.

டேங்கர் லாரியில் கொண்டு வரும் தண்ணீருக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். இதுகுறித்து விவசாயி சுப.தமிழரசன் கூறியதாவது:– இளையான்குடி பகுதியில் கண்மாயில் தேங்கி இருந்த ஓரளவு தண்ணீரை நம்பி நாங்கள் நெற்பயிர்களை நடவு செய்தோம். தற்போது கதிர் பிடித்து அறுவடைக்கு தயாராகும் நிலையில் தண்ணீர் இல்லாததால், டேங்கர் லாரி மூலம் தண்ணீரை விலைக்கு வாங்கி பாய்ச்சி வருகிறோம்.

ஒரு ஏக்கர் நடவு செய்துள்ள நெற்பயிரை காப்பாற்ற ரூ.10ஆயிரம் வரை செலவு செய்து வருகிறோம். ஏற்கனவே விதை நெல், களையெடுப்பு, உரம் உள்ளிட்ட செலவு வகையில் ஏராளமாக செலவு செய்துள்ளோம். தற்போது வாடி வரும் நெற்பயிரை காண முடியாமல், தண்ணீரை விலை கொடுத்து வாங்கி விவசாயம் செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story