வேலைவாய்ப்பு, பொருளாதாரம் முக்கியம் ஸ்டெர்லைட் விவகாரத்தில் முழு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு, பொருளாதாரம் முக்கியம். எனவே ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை குறித்து முழு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
வேலூர்,
பாரதீய ஜனதா கட்சி எஸ்.சி. அணியின் மாநில செயற்குழு கூட்டம் வேலூரில் நேற்று நடந்தது. இதில், மத்திய கப்பல் மற்றும் நிதித்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
மத்திய அரசு, பட்டியல் இன மக்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. தமிழகத்துக்கு கடந்த 6 மாதங்களில் சாலை போக்குவரத்துக்கு ரூ.1 லட்சம் கோடி நிதிக்கான திட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்திக் கொள்வது தமிழக அரசின் கடமையாகும்.
தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலையை திறப்பது, அவருக்கு பெருமையா என்பது குறித்து சொல்ல தெரியவில்லை. கருணாநிதி அவருடைய செயல்பாட்டின் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் மரியாதையை பெற்றவர். இன்றைக்கு அந்த கட்சி அவருடைய மரியாதையை இழந்து நிற்கிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியது குறித்து மறுஆய்வு செய்யும் நிலையில் அரசு உள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் வேலை வேண்டும் என்ற மனநிலையில் உள்ளனர். ஆரம்ப காலத்தில் ஸ்டெர்லைட் ஆலையை கொண்டு வரக்கூடாது என்று நான் போராடினேன். ஆனால் அப்போது பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்து அதனை கொண்டு வந்தனர். தற்போது அவர்களே வேண்டாம் என்று கூறுகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் ஸ்டெர்லைட் ஆலை வேண்டும் என்றும், மற்றொரு பிரிவினர் வேண்டாம் என்றும் கூறுகிறார்கள். தூத்துக்குடி மாவட்ட மக்களின் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரம் மிகவும் முக்கியம். இதனை முழு ஆய்வு செய்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5 மாநில தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தோற்றால் கூட, வாக்கு வங்கி அதிகமாகவே உள்ளது. இந்த தோல்வி பாரதீய ஜனதாவிற்கு ஒரு சின்ன சறுக்கலாகும். மாநில தேர்தலை வைத்துக் கொண்டு நாடாளுமன்ற தேர்தலை கணித்திட கூடாது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் இப்போது இருப்பதை விட, அதிகப்படியான உறுப்பினர்களை பெற்று பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவார். உலகின் வல்லரசு நாடாக அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா உயர்ந்தே தீரும்.
தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் எந்த திட்டத்தையும் மத்திய அரசிடம் கேட்டு பெறுவதில்லை. கஜா புயல் தொடர்பான அறிக்கை அளித்தவுடன், உள்துறை மந்திரியை சந்தித்து பேச உள்ளேன். தமிழகத்திற்கு சூரியன் தேவை தான். ஆனால் பாலைவனமாக்கும் சூரியன் தமிழகத்துக்கு தேவை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.