வேலூர் அருகே நர்சிங் மாணவி தீக்குளித்து தற்கொலை காதலன் செல்போனில் பேசாததால் விபரீத முடிவு
வேலூர் அருகே காதலன் செல்போனில் பேசாததால் மனமுடைந்த நர்சிங் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர்,
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
வேலூர் பாகாயம் அருகேயுள்ள சஞ்சீவிபுரத்தை சேர்ந்தவர் குணசீலன். இவருடைய மகள் பிரியதர்ஷினி என்கிற லாவண்யா (வயது 21). இவர் வேலூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வந்தார். லாவண்யாவும், அவரது உறவினர் மகனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இவர்களின் காதலை அறிந்த காதலன் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அதனால் காதலன் கடந்த சில நாட்களாக லாவண்யாவுடன் செல்போனில் பேசவில்லை என்றும், லாவண்யா நேரில் சந்தித்து பேச முயன்றபோதும் அவர் தவிர்த்ததாக கூறப்படுகிறது. அதனால் லாவண்யா மனவேதனையில் காணப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் லாவண்யா படித்து முடித்தவுடன் அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்து, அதற்காக மாப்பிள்ளை தேடி வந்துள்ளனர். இதனை அறிந்த லாவண்யா அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக லாவண்யாவிற்கும், அவரது பெற்றோருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதனால் மனஉளைச்சலுக்கு ஆளான லாவண்யா இரவு காதலனிடம் பேசினால் ஆறுதலாக இருக்கும் என்று காதலனுக்கு போன் செய்துள்ளார். ஆனால் பலமுறை போன் செய்தும் அவர் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் விரக்தி அடைந்த லாவண்யா இரவில் பெற்றோர் தூங்கிய பின்னர் கழிவறைக்கு சென்று உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரின் அலறல் சத்தம் கேட்ட பெற்றோர் உடனடியாக லாவண்யாவை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுதொடர்பாக பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நர்சிங் மாணவி தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.