பூந்தமல்லி அருகே லோடு வேன் தீப்பிடித்து எரிந்தது; டிரைவர் உடல் கருகி சாவு கொலையா? போலீஸ் விசாரணை


பூந்தமல்லி அருகே லோடு வேன் தீப்பிடித்து எரிந்தது; டிரைவர் உடல் கருகி சாவு கொலையா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 17 Dec 2018 3:30 AM IST (Updated: 16 Dec 2018 8:52 PM IST)
t-max-icont-min-icon

பூந்தமல்லி அருகே லோடு வேன் தீப்பிடித்து எரிந்தது. இதில் டிரைவர் உடல் கருகி பரிதாபமாக இறந்தார். அவர் உயிருடன் எரித்துக்கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பூந்தமல்லி,

பூந்தமல்லியை அடுத்த பாப்பான்சத்திரம் அருகே நேற்று முன்தினம் இரவு பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் லோடு வேன் ஒன்று நின்று கொண்டிருந்தது. திடீரென வேனின் முன்பகுதி தீப்பிடித்து எரியத்தொடங்கியது.

இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள், பூந்தமல்லி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதற்குள் வேன் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், லோடு வேனில் எரிந்த தீயை அணைத்தனர். ஆனாலும் வேன் முற்றிலும் எரிந்து நாசமானது.

லோடு வேனின் டிரைவர், உடல் கருகிய நிலையில் வேனுக்கு வெளியே பிணமாக கிடந்தார். அவர் சபரிமலைக்கு மாலை அணிந்திருந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த நசரத்பேட்டை போலீசார், பலியான டிரைவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

லோடு வேனின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரித்தனர். அதில், அந்த லோடுவேன் சென்னை அயனாவரத்தை சேர்ந்த ஜானகிராமன் என்பவருக்கு சொந்தமானது என்பதும், பலியானது லோடு வேன் டிரைவரான சென்னை ஓட்டேரி, செல்வப்பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த ஆதிகேசவன் (வயது 24) என்பதும், கடந்த 2 ஆண்டுகளாக இவர், ஜானகிராமனின் லோடு வேனை வாடகைக்கு எடுத்து ஓட்டி வந்ததும் தெரியவந்தது.

நேற்று முன்தினம் இரவு டிரைவர் ஆதிகேசவன், பூந்தமல்லி அருகே லோடு இறக்கிவிட்டு திரும்பி வந்த போது பாப்பான்சத்திரம் அருகே சாலையோரம் லோடு வேனை நிறுத்தி உள்ளார். அப்போதுதான் வேன் தீப்பிடித்து எரிந்து, அவர் உடல் கருகி பலியாகி உள்ளார்.

அவர் எதற்காக அந்த நேரத்தில் லோடு வேனை அங்கு நிறுத்தினார்?, சாப்பிடுவதற் காகவா? அல்லது வேறு ஏதேனும் காரணமா?. அவருடன் வேறு யாரும் வந்தார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வேனில் தீப்பிடித்ததும் ஆதிகேசவன் தப்பிக்க முயற்சி செய்து உள்ளார். ஆனால் டிரைவர் இருக்கைக்கு அருகில் உள்ள கதவை திறக்க முடியாததால், கிளனர் இருக்கையின் அருகில் உள்ள கதவை திறந்து வெளியே வந்து உள்ளார். ஆனால் அதற்குள் உடல் கருகி பலியாகிவிட்டார். எனவே யாராவது அவரை வேனுக்குள் வைத்து கதவை பூட்டி, உயிருடன் எரித்து கொலை செய்தனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story