சேரம்பாடியில், ஆடுகளை அடித்துக்கொன்ற சிறுத்தைப்புலி - கூண்டு வைத்து பிடிக்க வலியுறுத்தல்


சேரம்பாடியில், ஆடுகளை அடித்துக்கொன்ற சிறுத்தைப்புலி - கூண்டு வைத்து பிடிக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 17 Dec 2018 3:30 AM IST (Updated: 16 Dec 2018 10:31 PM IST)
t-max-icont-min-icon

சேரம்பாடியில் ஆடுகளை அடித்துக்கொன்ற சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பந்தலூர்,

பந்தலூர் தாலுகா சேரம்பாடி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்சு-2 பகுதியில் காட்டுயானை, சிறுத்தைப்புலி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. காட்டுயானைகள் தொழிலாளர்களின் வீடுகளை முற்றுகையிட்டு வருகின்றன. மேலும் விவசாய பயிர்களை சேதப்படுத்துகின்றன. சிறுத்தைப்புலிகள் இரவில் ஊருக்குள் புகுந்து வளர்ப்பு பிராணிகளை அடித்துக்கொன்று அட்டகாசம் செய்கின்றன. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் அரசு தேயிலை தோட்டம் ரேஞ்சு-2 பகுதியை சேர்ந்த ஜெயபாலகிருஷ்ணன் என்பவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலையில் மேய்ச்சலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய ஆடுகளை கொட்டகையில் அடைத்துவிட்டு, தூங்க சென்றார்.

நேற்று அதிகாலை 4 மணிக்கு தூக்கத்தில் இருந்து எழுந்த ஜெயபாலகிருஷ்ணன் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தார். அப்போது கொட்டகையில் அடைத்து வைத்திருந்த 2 ஆடுகளை சிறுத்தைப்புலி அடித்து கொன்று இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயபாலகிருஷ்ணன் சம்பவம் குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். இதன்பேரில் சேரம்பாடி வனச்சரகர் சின்னதம்பி, வன காப்பாளர்கள் சிவபிரகாசம், மாதவன், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட வனத்துறையினர் நேரில் வந்து இறந்து கிடந்த ஆடுகளை பார்வையிட்டனர்.

பின்னர் கால்நடை டாக்டர் மூலம் ஆடுகளின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது ஆடுகளை அடித்துக்கொன்றது சிறுத்தைப்புலி தான் என்பது உறுதியானது. சிறுத்தைப்புலி நடமாட்டம் உள்ளதால், அப்பகுதி மக்கள் பீதி அடைந்து உள்ளனர். மேலும் கூண்டு வைத்து சிறுத்தைப்புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story