ஊத்தங்கரை அருகே டாஸ்மாக் விற்பனையாளர்களை துப்பாக்கியால் சுட்டு ரூ.3½ லட்சம் கொள்ளை முகமூடி ஆசாமிகளுக்கு வலைவீச்சு
ஊத்தங்கரை அருகே டாஸ்மாக் கடை விற்பனையாளர்களை துப்பாக்கியால் சுட்டு ரூ.3½ லட்சம் கொள்ளையடித்து சென்ற முகமூடி ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஊத்தங்கரை,
தர்மபுரி மாவட்டம் புட்டிரெட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 50). தர்மபுரி நம்மியம்பட்டியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (45). இவர்கள் 2 பேரும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே காட்டேரியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள்.
அந்த கடையில் மேற்பார்வையாளர்களாக சிவக்குமார், சுபாஷ் ஆகியோர் இருக்கிறார்கள். முருகன், ஆனந்தனுடன் மேலும் கோவிந்தராஜ், இளையராஜா என்ற 2 விற்பனையாளர்களும் அந்த டாஸ்மாக் கடையில் பணிபுரிந்து வருகிறார்கள். நேற்று முன்தினம் இரவு டாஸ்மாக் கடையில் வசூல் ஆன தொகை ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தை முருகனும், ஆனந்தனும் ஒரு பையில் எடுத்துக் கொண்டு ஊத்தங்கரையில் இருந்த மேற்பார்வையாளர்கள் சிவக்குமார், சுபாஷ் ஆகியோரிடம் கொடுப்பதற்காக ஒரு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
இரவு 11 மணி அளவில் அவர்கள் காட்டேரி அருகே தனியார் கல்லூரி பக்கமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் பின்னால் ஒரு மோட்டார்சைக்கிள் வந்தது. அதில் 2 பேர் முகமூடி அணிந்தபடி வந்தனர். திடீரென்று அவர்கள் தாங்கள் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் முருகன், ஆனந்தனை நோக்கி சுட்டனர்.
இதில் மோட்டார்சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த முருகனின் காதில் குண்டு பாய்ந்தது. அதே போல மோட்டார்சைக்கிளை ஓட்டிச் சென்ற ஆனந்தனின் வயிற்றில் குண்டு பாய்ந்தது. இதில் 2 பேரும் அதே இடத்தில் மோட்டார்சைக்கிளோடு சரிந்தனர். அவர்கள் கீழே விழுந்ததும் முகமூடி ஆசாமிகள் அங்கு வந்து பையில் வைத்திருந்த ரூ.3½ லட்சத்தை கொள்ளையடித்துக்கொண்டு மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றனர்.
குண்டு காயம் அடைந்த 2 பேரையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் ஆனந்தன் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரது உடலில் இருந்த குண்டு அகற்றப்பட்டது.
அதே போல முருகன் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) தங்கவேல், ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அதே போல கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, ஓசூர், கிருஷ்ணகிரி குற்றப்பிரிவு போலீசாரும் அங்கு சென்று நடந்த சம்பவம் குறித்து விசாரணையில் இறங்கினார்கள்.
இந்த துணிகர கொள்ளை பற்றி தகவல் அறிந்த கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பெரியய்யா, சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. செந்தில்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் ஆகியோரும் கொள்ளை நடந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் காயம் அடைந்த டாஸ்மாக் ஊழியர்கள் முருகன், ஆனந்தன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினார்கள்.
நக்சல் தடுப்பு பிரிவு போலீசாரும், கியூ பிரிவு போலீசாரும் இது தொடர்பாக விசாரணை நடத்தினார்கள். கொள்ளையர்கள் துப்பாக்கி பயன்படுத்தி உள்ளதால் அது நாட்டுத்துப்பாக்கியா? அல்லது சிறிய ரக துப்பாக்கியா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற முகமூடி ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
டாஸ்மாக் கடை விற்பனையாளர்களை துப்பாக்கியால் சுட்டு ரூ.3½ லட்சம் கொள்ளையடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும், பாதுகாப்பு வழங்க கோரியும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று டாஸ்மாக் ஊழியர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மாலை 3 மணிக்கு டாஸ்மாக் கடைகள் வழக்கம் போல திறக்கப்பட்டன.
Related Tags :
Next Story