டாஸ்மாக் ஊழியர்கள் மீது துப்பாக்கி சூடு: கொள்ளையர்களை கைது செய்ய வலியுறுத்தி கடைகள் அடைப்பு


டாஸ்மாக் ஊழியர்கள் மீது துப்பாக்கி சூடு: கொள்ளையர்களை கைது செய்ய வலியுறுத்தி கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 16 Dec 2018 10:45 PM GMT (Updated: 16 Dec 2018 5:21 PM GMT)

டாஸ்மாக் ஊழியர்களை துப்பாக்கியால் சுட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், கொள்ளையர்களை கைது செய்ய வலியுறுத்தியும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 75 சதவீத டாஸ்மாக் கடைகள் நேற்று அடைக்கப்பட்டன.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 119 அரசு மதுபானக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ஊத்தங்கரை அருகே காட்டேரி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் பணிபுரியும் ஊழியர்கள் 2 பேரை துப்பாக்கியால் சுட்டு ரூ.3½ லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த டாஸ்மாக் ஊழியர்கள் நேற்று கடை திறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பையனப்பள்ளி டாஸ்மாக் குடோனை டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் முற்றுகையிட்டனர். இது தொடர்பாக நிர்வாகிகள் கூறியதாவது:-

டாஸ்மாக் ஊழியர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை ஊழியர்களிடம் வசூலிக்காமல், அரசே செலுத்த வேண்டும். டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேருக்கு நிவாரணம் வழங்க வேண்டும். கடை திறக்கும் நேரத்தை குறைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதைத் தொடர்ந்து டாஸ்மாக் சேலம் மண்டல முதுநிலை மேலாளர் இளங்கோ, அறிவுறுத்தலின் பேரில் ஊழியர்கள் தங்களின் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர். இன்று (திங்கட்கிழமை) அனைத்து டாஸ்மாக் ஊழியர்கள் ஒன்று சேர்ந்து போராட்டத்தை தொடர்வது குறித்தும், மண்டல முதுநிலை மேலாளரிடம் பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர். நேற்று மதியம் 12 மணி முதல் 3 மணி வரை கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் 75 சதவீத டாஸ்மாக் கடைகள் அடைக்கப் பட்டிருந்தன.

இந்த நிலையில் டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேரை துப்பாக்கியால் சுட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக டாஸ்மாக் உயர் அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினார்கள். அவர்கள் காட்டேரியில் உள்ள மதுக்கடைக்கு சென்று அங்குள்ள இருப்பு, நேற்று முன்தினம் நடந்த விற்பனை தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

Next Story