“தூத்துக்குடியில் இயல்பு நிலை நிலவுகிறது” கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி


“தூத்துக்குடியில் இயல்பு நிலை நிலவுகிறது” கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி
x
தினத்தந்தி 17 Dec 2018 4:00 AM IST (Updated: 16 Dec 2018 11:41 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் இயல்பு நிலை நிலவுவதாக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் நேற்று மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்காக, ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது. உடனடியாக முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் இது இறுதி தீர்ப்பு அல்ல, இதன் மீது மேல்முறையீடு செய்ய உள்ளோம்.

மேல்முறையீடு செய்வதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறோம் என்று தெளிவாக கூறினார்கள். அதன்படி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை ஆலையை திறக்க தீர்ப்பு வந்த பிறகு இதுவரை இயல்பு நிலை நிலவி வருகிறது. போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். பல்வேறு இடங்களில் இருந்து 1,500 போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். குறிப்பாக கலெக்டர் அலுவலகம், சிப்காட், ஸ்டெர்லைட் மற்றும் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

தூத்துக்குடியில் எந்த பிரச்சினையும் இல்லாமல் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக மாவட்டத்தில் உள்ள பல்வேறு தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், மத தலைவர்களிடம் தீர்ப்பு குறித்து விளக்கி பேசி வருகிறோம். அரசின் முடிவு தெளிவாக உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து மூடி வைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம். ஆகையால் மக்கள் இயல்பான சூழ்நிலை நிலவ ஒத்துழைக்க வேண்டும். அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு மக்கள் போலீசில் அனுமதி பெற்று, அவர்கள் கூறும் நிபந்தனைகளின்படி போராட்டம் நடத்தினால் பிரச்சினை இருக்காது.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வழக்கமாக யார் வேண்டுமானாலும் வந்து மனு கொடுக்கலாம். நாளை (அதாவது இன்று) வழக்கம் போல் மனு கொடுக்கலாம். சூழ்நிலைக்கு ஏற்ப பாதுகாப்பு அதிகரிக்கப்படும். ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து தாமிர தாதுவை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. அதன்படி ஒரு கப்பல் வரவழைக்கப்பட்டு உள்ளது. அதன்மூலம் தாமிரதாதுவை கொண்டு செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த ஆலையில் இருந்து தொடர்ந்து ரசாயனம் வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story