நோயால் மக்காச்சோள பயிர் கடும் பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் பாரதிய கிசான் சங்க செயற்குழுவில் வலியுறுத்தல்


நோயால் மக்காச்சோள பயிர் கடும் பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் பாரதிய கிசான் சங்க செயற்குழுவில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 16 Dec 2018 10:00 PM GMT (Updated: 16 Dec 2018 6:48 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் நோயால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிருக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என பாரதிய கிசான் சங்கத்தின் மாவட்ட செயற்குழுவில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

கோவில்பட்டி, 

பாரதிய கிசான் சங்கம் மாவட்ட செயற்குழு கூட்டம், கோவில்பட்டி பயணிகள் விடுதியில் நேற்று காலையில் நடந்தது. மாவட்ட தலைவர் ரெங்கநாயகலு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பரமேசுவரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் இயற்கை விவசாய சங்க மாவட்ட தலைவர் கருப்பசாமி, இளையரசனேந்தல் உரிமை மீட்பு குழு தலைவர் முருகன், பாரதி மக்கள் இயக்க தலைவர் ரவிச்சந்திரன், விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர் மாரியப்பன், பசு பாதுகாப்பு ஒன்றிய தலைவர் காளிமுத்து, நெல்லை மாவட்ட தலைவர் விஜயகுமார், ஒன்றிய துணை தலைவர் விசுவாமித்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக அகில பாரத பாரதிய கிசான் சங்க செயலாளர் பெருமாள், மாநில துணை தலைவர் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் 1 லட்சத்து 70 ஆயிரம் ஹெக்டர் மானாவாரி விவசாய நிலங்கள் உள்ளன. இதில் 80 சதவீதம் நிலங்களில் அமெரிக்க விதை நிறுவனம் வழங்கிய மக்காச்சோள விதைகள் பயிரிடப்பட்டு உள்ளன. இதில் படைப்புழு தாக்கல் காரணமாக பெரிய இழப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் அந்த அமெரிக்க விதை நிறுவனம் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க ஒன்றிய தலைவர் ஜெயராமன் நன்றி கூறினார்.

Next Story