தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை குறித்த பொய் பிரசாரத்தை எதிர்க்கிறோம் பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் பேட்டி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை குறித்த பொய் பிரசாரத்தை எதிர்க்கிறோம் என்று பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் கூறினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பா.ஜனதா பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தனியார் ஓட்டலில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் பிரபு முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.
பின்னர் கரு.நாகராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடியில் 18 விதமான தொழிற்சாலைகள் உள்ளன. இந்த ஆலைகளை கண்காணிக்க வேண்டியது மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழக அரசின் பொறுப்பு. தாமிர தொழிற்சாலைகள் உலகம் முழுவதும் 140 இடங்களில் உள்ளன. இந்தியாவில் ராஜஸ்தான், ஜார்கண்ட், குஜராத் ஆகிய மாநிலங்களில் செயல்பட்டு வருகின்றன. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தெரிவித்து உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை தொடக்கத்திலேயே எதிர்த்தது பா.ஜனதா. ஆனால் ஆலைக்கு அனுமதி கொடுத்தது, தொடங்கி வைத்தது ஆளும் அ.தி.மு.க.வும், ஆண்ட தி.மு.க.வும் தான்.
ஆலை மூடப்பட்ட பிறகு 3 லட்சம் டன் தாமிரம் இறக்குமதி செய்து உள்ளோம். இதனால் அந்நிய செலாவணி இழப்பு, வேலைவாய்ப்பு இழப்பு, தூத்துக்குடியில் பல இழப்பு என்று கூறுகிறார்கள். எத்தனை லட்சம் இழப்பு என்றாலும் பரவாயில்லை. ஆனால் மக்களுக்கு பாதிப்பு வரக்கூடாது. அது பொய்யான தகவலாக இருக்க கூடாது. அதற்கு தேவையான தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பு நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் மூடுவது தவறு இல்லை. இதனை உச்சநீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் பொய்யான பிரசாரத்தை எதிர்க்கிறோம்.
வேதாந்தா குழுமத்துக்கு எதிராக இங்கிலாந்தில் இருந்து திட்டமிட்டு செயல்படும் குழுவும் உள்ளது. வெளிநாட்டில் இருந்து தமிழகத்துக்கு எதிராக நிதியை பயன்படுத்துவதற்காக பல வழிகளில் பணம் அனுப்பப்படுகிறது. தவறான தொழில் செய்பவர்கள், கறுப்பு பணத்தை கையாளுபவர்களுக்கு பா.ஜனதாவை பிடிக்கவில்லை. இது போன்ற பணம் எந்த வழியிலும் வரும். ஸ்டெர்லைட் பிரச்சினையில் சட்டப்படி நடப்பதை ஏற்றுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story