குடிபோதையில் நடுரோட்டில் கிடந்த இளம்பெண்ணால் பரபரப்பு


குடிபோதையில் நடுரோட்டில் கிடந்த இளம்பெண்ணால் பரபரப்பு
x
தினத்தந்தி 17 Dec 2018 5:00 AM IST (Updated: 17 Dec 2018 1:02 AM IST)
t-max-icont-min-icon

கோவை ஆர்.எஸ்.புரத்தில், நடுரோட்டில் குடிபோதையில் கிடந்த இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை,

கோவை ஆர்.எஸ்.புரம் காந்தி பூங்கா அருகே நேற்று காலை 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் நடுரோட்டில் கிடப்பதாக தகவல் பரவியது. இதனால் அந்த பகுதியில் ஏராளமானோர் திரண்டனர். அவர் தலைகுப்புற படுத்து இருந்ததால் அவர் உயிருடன் இருக்கிறாரா? என்று அங்கு திரண்டிருந்தவர்கள் சந்தேகம் அடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆர்.எஸ்.புரம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர் கள் அந்த இளம்பெண்ணின் அருகில் சென்று பார்த்தபோது அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு நடுரோட்டில் கிடப்பது தெரியவந்தது.

உடனே போலீசார் அங்குள்ள ஒரு கடையில் இருந்து தண்ணீரை எடுத்து அவர் மீது ஊற்றினார்கள். எனினும் அவரால் எழுந்தி ரிக்க முடியவில்லை. எனவே 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே ஆம்புலன்ஸ் அங்கு வந்தது. அதில் இருந்த பெண் ஊழியர் மற்றும் பெண் போலீசார் குடிபோதையில் கிடந்த அந்த இளம்பெண்ணை எழுப்பி பார்த்தனர். ஆனாலும் அவரால் எழுந்திருக்க முடியவில்லை.இதையடுத்து ஆம்புலன்சில் இருந்த ஊழியர்கள் குடிபோதை தெளிவதற்கான மருந்தை ஸ்பிரே மூலம் அந்த இளம்பெண் மீது அடித்துவிட்டு சென்றனர். சில வினாடிகள் கழித்து பார்த்த பின்னரும் அவர் எழுந்திருக்காததால், போலீசார் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் அந்த இளம்பெண்ணை தூக்கி ரோட்டின் அருகில் கிடத்தினார்கள்.

பின்னர் போலீசார் அவரை எழுப்பி விசாரித்தபோது, தட்டுதடுமாறி பதில் அளித்தார். அவர் கோவையை சேர்ந்தவர் என்றும் இரவில் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாகவும் கூறிவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டார். இதுகுறித்து அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் கூறியதாவது:-

டாஸ்மாக் மதுக்கடைகள் அதிகளவில் திறக்கப்பட்டு உள்ளதால் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு போதையில் எங்கு இருக்கிறோம் என்று தெரியாமல் ரோட்டில் கிடப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். பெரும்பாலும் ஆண்கள்தான் இதுபோன்று கிடப்பார்கள். ஆனால் ஒரு இளம்பெண் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு, அவர் அணிந்திருந்த ஆடைகள் கூட விலகியது தெரியாமல் நடுரோட்டில் கிடப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.

மது அருந்துவது அவர்களின் சொந்த விருப்பம். அதற்காக அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு ரோட்டில் கிடப்பது தவறு. இதுபோன்று நடுரோட்டில் போதையில் கிடப்பது யாராக இருந்தாலும் பாரபட்சம் இல்லாமல் அவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story