தனியார் பள்ளி பஸ் டிரைவர் சாவில் திருப்பம் - அடித்து கொன்ற நண்பர் கைது


தனியார் பள்ளி பஸ் டிரைவர் சாவில் திருப்பம் - அடித்து கொன்ற நண்பர் கைது
x
தினத்தந்தி 17 Dec 2018 3:30 AM IST (Updated: 17 Dec 2018 1:02 AM IST)
t-max-icont-min-icon

தனியார் பள்ளி பஸ் டிரைவர் சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரை அடித்து கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்தனர்.

பழனி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள இடுகட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் என்கிற ரஞ்சித் (வயது 27). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அதே ஊரை சேர்ந்தவர் பாபு என்கிற பாரதி (33). இவர்கள் 2 பேரும் நண்பர்கள். கடந்த 7-ந்தேதி இவர்கள் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர்.

அடிவாரத்தில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கினர். பின்னர் அவர்கள் பழனியில் மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அவர்கள் அறைக்கு வந்தனர். அங்கு ராமச்சந்திரனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்ததாக பாபு இடுகட்டியில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து பழனி வந்த அவருடைய உறவினர்கள், ராமச்சந்திரனின் உடலை எடுத்து சென்று இடுகட்டியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்தனர். இந்த நிலையில் ராமச்சந்திரனின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தம்பி வாசுதேவன் பழனி அடிவாரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே அவருடைய உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் ஊட்டி தாசில்தார் மகேஸ்வரி முன்னிலையில் இடுகட்டியில் உள்ள மயானத்தில் புதைக்கப்பட்ட ராமச்சந்திரனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் அங்கு வைத்து கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். அதில் அவருடைய உடலில் காயங்கள் இருப்பதும், அவர் தாக்கப்பட்டு இறந்து இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் இடுகட்டியில் பாபுவை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அப்போது போலீசாரிடம் பாபு கூறியதாவது:-

கடந்த 7-ந் தேதி பழனியில் அறை எடுத்து தங்கி இருந்தோம். அப்போது ராமச்சந்திரனிடம், அவருடைய மனைவியிடம் ஏன் அடிக்கடி தகராறு செய்கிறாய். அவரை நான் திருமணம் செய்து இருந்தால் நன்றாக வைத்து கொள்வேன் என்றேன். இதனால் அவர் ஆத்திரமடைந்து அவர் என்னை தாக்கினார். பதிலுக்கு நானும் தாக்கினேன். இதில் ராமச்சந்திரன் இறந்து விட்டார். உடனே ஊரில் இருக்கும் அவருடைய உறவினர்களிடம் நெஞ்சுவலியால் ராமச்சந்திரன் இறந்ததாக கூறினேன். ஆனால் அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசார் விசாரணை நடத்தியதில் அவரை அடித்து கொலை செய்ததை கண்டுபிடித்துவிட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து பழனி அடிவாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சந்தேக மரணம் என்ற வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து பாபுவை கைது செய்தனர். இந்த சம்பவம் பழனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story