சாப்பிட குழம்பு கொடுக்காததால் ஆத்திரம் - மனைவியை அடித்து கொன்ற முதியவர்


சாப்பிட குழம்பு கொடுக்காததால் ஆத்திரம் - மனைவியை அடித்து கொன்ற முதியவர்
x
தினத்தந்தி 17 Dec 2018 3:30 AM IST (Updated: 17 Dec 2018 1:02 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே சாப்பிட குழம்பு கொடுக்காத ஆத்திரத்தில் மனைவியை அடித்து கொன்ற முதியவர் கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திண்டுக்கல்,

திண்டுக்கல்லை அடுத்த பொன்மாந்துறையை சேர்ந்தவர் இன்னாசி (வயது 65). அவருடைய மனைவி எலிசி (62). இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இன்னாசி தனது மனைவி எலிசியுடன் தனியாக வசித்தார்.

இதற்கிடையே வயது முதிர்வு, உடல்நலம் பாதிப்பு ஆகியவற்றால் இன்னாசி வேலைக்கு செல்வதில்லை. மேலும் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இன்னாசி, தனது மனைவி எலிசியிடம் தனக்கு சாப்பாடு பரிமாறும்படி கேட்டுள்ளார்.

அப்போது எலிசி சாதம் மற்றும் தண்ணீர் மட்டுமே கொடுத்துள்ளார். குழம்பு, பொரியல் எதுவும் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இது, இன்னாசிக்கு ஏமாற்றத்தை அளித்தது. உடனே அதுபற்றி மனைவியிடம், அவர் கேட்டுள்ளார். அப்போது 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த இன்னாசி, பருப்பு கடையும் மத்தை எடுத்து எலிசியின் தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த எலிசி, மயங்கி விழுந்தார். சிறிதுநேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் எலிசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் அந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்னாசியை கைது செய்தனர். சாப்பாடு தகராறில் மனைவியை, முதியவர் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story