ஓமலூர் அருகே ரெயில்வே சுரங்க பாதை அமைக்கும் பணி தீவிரம்


ஓமலூர் அருகே ரெயில்வே சுரங்க பாதை அமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 17 Dec 2018 3:30 AM IST (Updated: 17 Dec 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

ஓமலூர் அருகே ரெயில்வே சுரங்க பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஓமலூர்,

சேலம் - சென்னை, சேலம்-பெங்களூரு, சேலம்- மேட்டூர் இடையே ரெயில் தண்டவாளங்களில் உள்ள ரெயில்வே கேட்டுகள் மூடப்பட்டு அருகிலேயே பொதுமக்கள் வாகன போக்குவரத்துக்காக சுரங்க பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சேலம்- மேட்டூர் மற்றும் சேலம்- பெங்களூரு இடையே பெரும்பாலான இடங்களில் சுரங்க பாதை அமைக்கப்பட்டு, ரெயில்வே கேட்டுகள் நிரந்தரமாக மூடப்பட்டன. ஆனால் இந்த சுரங்க பாதையில் மழை காலங்களில் மழைநீர் வெளியேற போதிய வடிகால் வசதி இல்லாததால் தண்ணீர் சுரங்க பாதையிலேயே தேங்கி வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றன.

இந்தநிலையில் சேலம்- சென்னை இடையே உள்ள தண்டவாளத்திலும், கருப்பூர், தின்னப்பட்டி, டேனிஷ்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள ரெயில்வே கேட் அருகேயும் சுரங்க பாதை அமைக்க ரெயில்வே துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இதற்காக டேனிஷ்பேட்டை அருகே சுரங்க பாதை அமைக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி தொடங்கியது. அப்போது பொதுமக்கள், விவசாயிகள் தண்ணீர் தேங்காமல் சுரங்க பாதை அமைக்க வேண்டும் என்று ரெயில்வே துறை அதிகாரிகள் மற்றும் காடையாம்பட்டி தாசில்தார் மகேஸ்வரி ஆகியோரிடம் கோரிக்கை விடுத்தனர்.


இதனையடுத்து தண்ணீர் தேங்காமல் போதிய வடிகால் வசதியுடன் சுரங்க பாதை அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தநிலையில் சுரங்க பாதை அமைக்கும் பணி நேற்று முன்தினம் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களாக பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டி, 14 அடி உயரமுள்ள கான்கிரீட் ஷட்டர் பொருத்தும் பணி நடைபெறுகிறது. இந்த பணி விரைவில் முடிக்கப்படும் என தெரிகிறது.

இந்த பணிகள் முடிந்த பின்னர் டேனிஷ்பேட்டை ரெயில்வே கேட் நிரந்தரமாக மூடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, இந்த சுரங்க பாதை மட்டுமின்றி இனி அமைக்கப்படும் அனைத்து சுரங்க பாதைகளுக்கும் வெளியே இருபுறமும் மேற்கூரை அமைக்கப்படுவதால் மழைநீர் சுரங்க பாதையில் தேங்காது. மேலும் தின்னப்பட்டி, கருப்பூர் பகுதிகளிலும் பணி நடைபெற உள்ளது. ஏற்கனவே அமைக்கப்பட்ட அனைத்து சுரங்க பாதைக்கும் மேற்கூரை விரைவில் அமைக்கப்படும், என்றனர்.

Next Story