வத்தலக்குண்டுவில் துணிகரம், அடுத்தடுத்து 3 வீடுகளில் திருட்டு - மர்மநபர்கள் கைவரிசை
வத்தலக்குண்டுவில், ஒரே நாளில் அடுத்தடுத்து 3 பேரின் வீடுகளில் புகுந்து மர்மநபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வத்தலக்குண்டு,
வத்தலக்குண்டு அண்ணா நகரை சேர்ந்தவர் அருண் குமார் (வயது 27). எலக்ட்ரீசியன். அவருடைய மனைவி ரம்யா (23). இவர்களுக்கு கடந்த 3 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. இதையடுத்து அவர்கள் அப்பகுதியில் வீடு எடுத்து தனியாக வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் ரம்யாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து அருண்குமார் தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் பக்கத்து வீட்டில் தங்கியுள்ளார்.
இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை கடப்பாரையால் நெம்பி உடைத்துள்ளனர். பின்னர் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் வைத்திருந்த தங்க நகைகளை திருடி கொண்டு தப்பி சென்றனர். நேற்று காலையில் அருண்குமார் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகைகள் திருடு போயிருப்பது தெரியவந்தது.
இதேபோல், அதே பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். அவருடைய மனைவி சுசீலா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த சண்முகம் தனது மனைவி குழந்தைகளுடன் மதுரை பாண்டி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார்.
வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்களை திருடி சென்றனர். நேற்று காலை குடும்பத்துடன் வீட்டுக்கு வந்த சண்முகம் திருட்டு நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதேபோல் அந்த பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் நாகராஜன் என்பவருடைய வீட்டின் பூட்டையும் உடைத்து மர்மநபர்கள் நகை, பணத்தை தேடியுள்ளனர். ஆனால் நகை, பணம் எதுவும் இல்லாததால் திரும்பி சென்றனர்.
இந்த சம்பவங்கள் குறித்து 3 பேரும் தனித்தனியாக வத்தலக்குண்டு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகுமரன் தலைமையில் வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடங்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த 3 வீடுகளில் ஒரே நபர்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் 3 பேரின் வீடுகளில் திருட்டு நடந்த சம்பவம் அப்பகுதி மக்களை பீதி அடைய செய்துள்ளது.
Related Tags :
Next Story