விநாயகர் கோவில் வளாகத்தில் மது குடித்ததை தட்டிக்கேட்ட வாலிபர்கள் மீது தாக்குதல் பொதுமக்கள் சாலை மறியல்
சேந்தமங்கலம் அருகே விநாயகர் கோவில் வளாகத்தில் மது குடித்ததை தட்டிக்கேட்ட வாலிபர்களை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேந்தமங்கலம்,
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ளது மலைவேப்பன்குட்டை கிராமம். இந்த கிராமத்திற்கு வருபவர்கள் மற்றும் அதேபகுதியை சேர்ந்தவர்கள் அங்குள்ள பழைய விநாயகர் கோவில் வளாகத்தில் அமர்ந்து மது குடித்து ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர். இதை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கண்டித்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று விநாயகர் கோவில் வளாகத்தில் சிலர் மது குடித்து கொண்டு இருந்தனர். இதை அதேபகுதியை சேர்ந்த லோகு (வயது 29), ராஜேஸ்கண்ணா (28), ஆகிய 2 பேரும் தட்டி கேட்டனர். இதில் ஆத்திரமடைந்த மது குடித்து கொண்டிருந்த நபர்கள் இவர்கள் 2 பேரையும் தாக்கினர். மேலும் அவர்கள் ஆயுதங்களை காட்டி கொன்று விடுவதாக மிரட்டி உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் பேளுக்குறிச்சி போலீசில் புகார் செய்தனர். இதற்கிடையே வெட்டுக்காடு-ராசிபுரம் பிரதான சாலையில் நேற்று மாலை வாலிபர்களை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த சேந்தமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன் செல்வராஜ் விரைந்து சென்று பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது அங்கிருந்த பொதுமக்கள் வாலிபர்களை தாக்கிய 4 பேரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக இன்ஸ்பெக்டர் உறுதி அளித்தார். அதைதொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story