சிட்லிங் கிராமத்தில் 152 பழங்குடியினருக்கு ரூ.2.86 கோடி மதிப்பில் நலதிட்ட உதவிகள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்


சிட்லிங் கிராமத்தில் 152 பழங்குடியினருக்கு ரூ.2.86 கோடி மதிப்பில் நலதிட்ட உதவிகள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்
x
தினத்தந்தி 17 Dec 2018 4:30 AM IST (Updated: 17 Dec 2018 1:31 AM IST)
t-max-icont-min-icon

சிட்லிங் கிராமத்தில் 152 பழங்குடியினருக்கு ரூ.2.86 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் சிட்லிங் ஊராட்சியில் தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளி இரட்டைகுட்டை ஊராட்சியில் புதிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவற்றின் தொடக்கவிழா நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி வரவேற்றார். உதவி கலெக்டர் புண்ணியகோட்டி, மாவட்ட கல்வி அலுவலர்(அரூர்) குழந்தைவேல், மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் சரவணன், தாசில்தார் அன்பு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமரவேல், தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி பள்ளிகளை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து 152 பழங்குடியின பயனாளிகளுக்கு ரூ.2.86 கோடி மதிப்பிலான நலதிட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:–

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 150 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. கிராமப்புற மாணவ– மாணவிகள் அனைவரும் தரமான கல்வியை பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழக அரசு பள்ளிகளை தரம் உயர்த்தி வருகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக நிதியாக ரூ.26 ஆயிரத்து 130 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசு பள்ளிகளில் கல்வித்தரம் உயர்ந்துள்ளது.

தமிழக அரசு வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத சிறப்புத்திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறையில் செயல்படுத்திவருவதால் கல்வி கற்போர் சதவீதம் உயர்ந்துள்ளது. குறிப்பாக நடப்பு கல்வியாண்டில் தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ்–2 வகுப்பை முடித்துவிட்டு உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை 98.41 சதவீதமாக அதிகரித்து உள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ– மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்று தங்கள் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளவேண்டும். சிட்லிங் பள்ளிக்கு கூடுதலாக நபார்டு திட்டத்தில் வகுப்பறைகளும், ஆய்வகங்களும் கட்டி வழங்கப்படும். தேவையான ஆசிரியர் பணியிடங்கள் விரைவாக நிரப்பிடநடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இந்த விழாவில் தர்மபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தலைவர் டி.ஆர்.அன்பழகன், அரசு வக்கீல் பசுபதி, முன்னாள் எம்.எல்.ஏ. குப்புசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் குமரவேல், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் கோவிந்தசாமி, பொன்னுவேல், சின்னதுரை, ஆறுமுகம், மதிவாணன் உள்பட பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ–மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story