அணைக்கட்டு அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி மெக்கானிக் பலி டிரைவரை கைது செய்யக்கோரி கிராம மக்கள் போராட்டம்
அணைக்கட்டு அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் மெக்கானிக் உயிரிழந்தார். கார் டிரைவரை கைது செய்யக்கோரி கிராம மக்கள் போலீசாரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அணைக்கட்டு,
அணைக்கட்டை அடுத்த தேவிசெட்டிகுப்பம் கிராமத்தை சேர்ந்த சவுந்தர்ராஜன் மகன் ஸ்டீபன் (வயது 22). இவர் சென்னையில் உள்ள மோட்டார் விற்பனை நிறுவனத்தில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் அவர் வார விடுமுறையை கொண்டாட சொந்த ஊருக்கு வந்தார்.
இந்த நிலையில் நேற்று ஸ்டீபன் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய அதனை ஒதியத்தூரில் உள்ள மெக்கானிக்கிடம் ஒப்படைத்தார்.
பின்னர் அதனை சரி செய்தபின் மோட்டார்சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். ஒதியத்தூர் ஏரிக்கரையில் வந்தபோது எதிரே வந்த கார் திடீரென ஸ்டீபன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி எறியப்பட்ட அவர் ஏரிக்கரையில் உள்ள 20 அடி பள்ளத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். உடனே காரை அங்கேயே நிறுத்திவிட்டு டிரைவர் தப்பியோடினார்.
இதனை அறிந்த தேவிசெட்டிகுப்பம் கிராம மக்கள் ஒதியத்தூர் ஏரிக்கரைக்கு சென்றனர். சிறிதுநேரத்தில் அங்கு வந்த பள்ளிகொண்டா போலீசார் ஸ்டீபன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். அப்போது கிராம மக்கள் திடீரென போலீசாரை முற்றுகையிட்டு, தப்பியோடிய கார் டிரைவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, உடனடி நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதைத்தொடர்ந்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து ஸ்டீபன் உடல் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story