பர்கூர் அருகே கார் மோதி பெண் துறவிகள் 2 பேர் பலி சாலையோரம் நடந்து சென்ற போது பரிதாபம்
பர்கூர் அருகே சாலையோரமாக நடந்து சென்ற ஜெயின் மத பெண் துறவிகள் 2 பேர் மீது கார் மோதியதில் அவர்கள் பரிதாபமாக இறந்தனர்.
பர்கூர்,
வடமாநிலங்களை சேர்ந்த ஜெயின் மத துறவிகள் தமிழ்நாட்டில் ஆன்மிக பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் குஜராத் மாநிலம் பாவு நகரை சேர்ந்த ஜிந்தர் மசூரி (69), மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பூஜா (24) என்ற பெண் துறவிகள் உள்பட 9 பெண் துறவிகள், ஒரு ஆண் துறவி என்று மொத்தம் 10 பேர் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு வந்தனர். அவர்கள் நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரி மாவட்டம் சுபேதார்மேடு அருகில் உள்ள பத்மாவதி கோவிலில் தங்கினார்கள்.
பின்னர் அவர்கள் நேற்று காலை மீண்டும் தங்களின் நடைபயணத்தை தொடங்கினார்கள். திருப்பத்தூர் செல்வதற்காக அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது ஜிந்தர் மசூரியை ஒரு சக்கர நாற்காலியில் வைத்தவாறு, பூஜா தள்ளியபடி சென்று கொண்டிருந்தார். அவர்கள் கிருஷ்ணகிரி- சென்னை சாலையில் கந்திகுப்பம் அருகே ஒரப்பம் தனியார் பொறியியல் கல்லூரி பக்கமாக சென்று கொண்டிருந்தனர்.
அந்த நேரம் கிருஷ்ணகிரியில் இருந்து கந்திகுப்பம் அருகே உள்ள மிட்டப்பள்ளி நோக்கி ஒரு கார் சென்று கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக கார் ஜிந்தர் மசூரி, பூஜா மீது மோதியது. இதில் அவர்கள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மோதிய வேகத்தில் கார் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரை ஓட்டிச் சென்ற மிட்டப்பள்ளியைச் சேர்ந்த ஜோசப் பிராங்கிளின் என்பவர் காயம் அடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் கந்திகுப்பம் போலீசார் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் விபத்தில் பலியான 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. இதில் பூஜாவின் உடல் ஆம்புலன்சில் பெங்களூரு கொண்டு செல்லப்பட்டு விமானம் மூலமாக மத்திய பிரதேசம் கொண்டு செல்லப்பட்டது. ஜிந்தர் மசூரியின் உடலையும் விமானத்தில் சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ஜெயின் மத துறவிகள் முடிவு செய்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆன்மிக நடைபயணம் வந்த இடத்தில் 2 ஜெயின் மத பெண் துறவிகள் விபத்தில் பலியான சம்பவம் ஜெயின் மத துறவிகள், பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story