மேட்டுப்பாளையத்தில் சிறப்பு நலவாழ்வு முகாம், பார்வையாளர்களை வியக்க வைத்த யானைகள் - சிலம்பம் சுற்றியும், ‘மவுத் ஆர்கன்’ வாசித்தும் அசத்தல்


மேட்டுப்பாளையத்தில் சிறப்பு நலவாழ்வு முகாம், பார்வையாளர்களை வியக்க வைத்த யானைகள் - சிலம்பம் சுற்றியும், ‘மவுத் ஆர்கன்’ வாசித்தும் அசத்தல்
x
தினத்தந்தி 16 Dec 2018 10:30 PM GMT (Updated: 16 Dec 2018 8:37 PM GMT)

மேட்டுப்பாளையத்தில் நடந்து வரும் சிறப்பு நலவாழ்வு முகாமில் யானைகள் சிலம்பம் சுற்றியும், ‘மவுத் ஆர்கன்’ வாசித்தும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

மேட்டுப்பாளையம், 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் கடந்த 14-ந் தேதி தொடங்கியது. முகாமில் 27 யானைகள் கலந்து கொண்டுள்ளன. இன்னும் ஓரிரு நாட்களில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் யானை அகிலா வர உள்ளது.

முகாமில் கலந்து கொண்ட யானைகளுக்கு காலை மற்றும் மாலை நடைபயிற்சி அளிக்கப்படுகிறது. குளியல் மேடைகளில் (ஷவர்) யானைகள் குளிக்க வைக்கப்படுகின்றன. சமச்சீர் உணவாக பசுந்தீவனங்கள் வழங்கப்படுகின்றன. அதன் பின்னர் யானைகளுக்கு பகல் நேரத்தில் ஓய்வு அளிக்கப்படுகின்றது. ஒருசில யானைகள் படுத்து ஓய்வெடுக்கின்றன. ஒருசில யானைகள் தும்பிக்கையால் மண்ணை தனது உடலில் வாரியிறைத்து விளையாடுகின்றன. இதனை மண்குளியல் என்று பாகன்கள் கூறுகின்றனர்.

முகாமில் கலந்து கொண்ட யானைகள் ஒவ்வொன்றும் தனி சிறப்புகளுடன் விளங்குகிறது. திருவண்ணாமலை மாவட்டம் போளூர்வட்டம் படவேடு ரேணுகாம்பாள் அம்மன் கோவிலுடன் இணைந்த ராமர் கோவில் யானை லட்சுமி, பாகன் ரங்கனின் அன்பு கட்டளைக்கேற்ப தும்பிக்கையால் ‘மவுத் ஆர்கன்’ வாசித்தும், சலங்கை மணி அடித்தும், எதிரிகளோடு சண்டையிடுவது போல் ஆவேசமாக சிலம்பம் சுற்றியும் பார்வையாளர்களை அசத்தியது.

யானை லட்சுமியின் விளையாட்டுகளை கண்டு பார்வையாளர்கள் வியந்தனர். விடுமுறை தினமான நேற்று பார்வையாளர்கள் அதிகளவில் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று முகாமில் உள்ள யானைகளை கண்டு மகிழ்ந்தனர்.

முகாம் ஒருங்கிணைப்பாளரும், கோவை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையருமான ராஜமாணிக்கம் தலைமையில் துணை ஒருங்கிணைப்பாளர் பழனிக்குமார், உதவி ஆணையர்கள் ராமு, நந்தகுமார், முகாம் பொது மேற்பார்வையாளர் வெற்றிசெல்வன் ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை செய்துள்ளனர். போலீசார், வனத்துறையினர் மற்றும் தனியார் பாதுகாப்பு பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Next Story