19-ந் தேதி தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்


19-ந் தேதி தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 16 Dec 2018 10:45 PM GMT (Updated: 16 Dec 2018 8:39 PM GMT)

கோரிக்கைகளை வலியுறுத்தி 19-ந் தேதி தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்துவது என புதுக்கோட்டையில் நடைபெற்ற கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுக்கோட்டை,

கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கத்தின் அவசர மாநில செயற்குழு கூட்டம் நேற்று புதுக்கோட்டை மாவட்ட சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சங்கத்தின் முன்னாள் பொது செயலாளர் பாக்கியநாதன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் கிராம நிர்வாகம் புத்துயிர் பெரும் நோக்கில் உடனடியாக மாறுதல் கோரும் அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலித்து மாவட்ட மாறுதல் வழங்க ஆவண செய்ய வேண்டும்.

நில நிர்வாகம் சீர்பெறும் நோக்கில் உட் பிரிவு இனங்களில் கிராம நிர்வாக அதிகாரிகளின் பரிந்துரையை உறுதிசெய்ய வேண்டும். பாதிக்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு மடிக்கணினி உள்பட எவ்வித வசதிகளும் தரப்படவில்லை. எனவே அனைத்து உறுப்பினர்களும் 100 சதவீதம் மடிக்கணினி வழங்கப்படுவதை உறுதி செய்வதுடன், 4 ஜி சிம்கார்டு, மோடம், பிரிண்டர் போன்ற அதற்குரிய பொருட்களும் வழங்க வேண்டும். 10 ஆண்டுகள் பணி முடித்த அனைத்து கிராம நிர்வாக அதிகாரிகளுக்கும், துணை தாசில்தார் நிலையில் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

அனைத்து வருவாய் கிராமங்களுக்கும் உடனடியாக புதிய கிராம நிர்வாக அதிகாரிகளை நியமிப்பதோடு, கூடுதல் பொறுப்பு கிராமங்களின் பணியாற்றுபவர்களுக்கு மீண்டும் கூடுதல் பொறுப்பூதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அனைத்து கிராம நிர்வாக அதிகாரிகளுக்கும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 19-ந் தேதி தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்துவது, வருகிற ஜனவரி மாதம் 2-ந் தேதி இணையதள சான்றுகள் புறக்கணிப்பு போராட்டம் நடத்துவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story