‘தேர்தல் அறிவித்த உடன் கூட்டணி முடிவு செய்யப்படும்’ - முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி


‘தேர்தல் அறிவித்த உடன் கூட்டணி முடிவு செய்யப்படும்’ - முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 16 Dec 2018 11:00 PM GMT (Updated: 16 Dec 2018 9:12 PM GMT)

தேர்தல் அறிவித்தவுடன் கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும் என்று கோவையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

கோவை,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு அவர் சென்னை செல்வதற்காக கார் மூலம் நேற்று இரவு 8 மணியளவில் கோவை வந்தார். அப்போது அவர் கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சிலை வைக்கும் நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டு உள்ளனர். ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக தி.மு.க முன்நிறுத்தி இருப்பது தி.மு.க.வினரின் விருப்பம். அவர்கள் சிலை திறப்பு விழாவுக்காகத்தான் ஒன்று சேர்ந்துள்ளனர். தி.மு.க. தரப்பில் கூட்டணியே அமையவில்லை. கூட்டணி அமையவில்லை என்பதை தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் ஏற்கனவே விளக்கி இருக்கிறார்.

தேர்தல் அறிவித்த உடன் கூட்டணி வைக்கும் சூழ்நிலை அ.தி.மு.க.விற்கு உருவாகும். அப்போது யாருடன் கூட்டணி வைப்பது என்பது பற்றி அ.தி.மு.க. முடிவு செய்யும். ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் விதிகளை மீறியதால் அது மூடப்பட்டது. தேசிய பசுமை தீர்பாயத்தின் தீர்ப்பினை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் சார்பில் மேல்முறையீடு செய்யப்படும். கொங்கு மண்டல மக்களின் கனவு திட்டமான அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு ரூ.1,532 கோடிக்கு ஒப்பந்தம் கோரப்பட்டு உள்ளது. விரைவில் ஒப்பந்தம் இறுதி செயல்பட்டு பணிகள் தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஏ.கே.செல்வராஜ் எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், வி.சி.ஆறுகுட்டி, ஓ.கே.சின்னராஜ், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, விமல்சோமு, சால்ட் வெள்ளிங்கிரி, வெள்ளலூர் பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.



Next Story