திருவட்டார் அருகே பரபரப்பு: கார் மோதி மின்கம்பம் முறிந்து விழுந்தது; வாலிபர் படுகாயம்


திருவட்டார் அருகே பரபரப்பு: கார் மோதி மின்கம்பம் முறிந்து விழுந்தது; வாலிபர் படுகாயம்
x
தினத்தந்தி 17 Dec 2018 3:45 AM IST (Updated: 17 Dec 2018 3:34 AM IST)
t-max-icont-min-icon

திருவட்டார் அருகே கார் மோதி மின்கம்பம் முறிந்து விழுந்ததில் வாலிபர் படுகாயம் அடைந்தார்.

திருவட்டார்,

நெய்யூர் ஆலங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஆஸ்டின் ஞானபிரகாஷ் (வயது 44). இவர் நேற்று மாலை திற்பரப்பு அருவிக்கு சொகுசு காரில் சென்றார். அப்போது அவருடன், நண்பர்களான அழகியமண்டபத்தை சேர்ந்த ஜெரால்டு (44), மேக்கா மண்டபத்தை சேர்ந்த தாமஸ் (67), பெத்தேல்புரத்தை சேர்ந்த கிப்சன் ஆகியோரும் சென்றனர். அவர்கள் 4 பேரும் அருவியில் குளித்து விட்டு குலசேகரத்தில் இருந்து மார்த்தாண்டத்துக்கு காரில் புறப்பட்டனர். அந்த கார் திருவட்டாரை அடுத்த புத்தன்கடை பகுதியில் செல்லும் போது திடீரென்று ஆஸ்டின் ஞானபிரகாசின் கட்டுப்பாட்டை இழந்து தாறு மாறாக ஓடி தேவாலயம் அருகே இருந்த மின்கம்பத்தில் மோதியது.

இதனால் அந்த மின்கம்பம் முறிந்து, சாலையில் பஸ்சுக்காக காத்து நின்ற குலசேகரத்தை சேர்ந்த விஜிஸ் (20) என்பவர் மீது விழுந்தது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் விஜிசை மீட்டு, மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே அந்த கார் அங்கிருந்து புறப்பட்டு சிறிது தூரம் சென்றதும் இன்னொரு மின்கம்பத்தில் மோதி நின்றது. உடனே கார் அருகில் பொது மக்கள் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி திருவட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, காரில் இருந்த 4 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அப்போது அவர்கள் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து திருவட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story