கடலூரில், கடல் சீற்றம் எதிரொலி: மீனவர்கள் 5-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை - பொதுமக்கள் சில்வர் பீச்சுக்கு செல்ல தடை


கடலூரில், கடல் சீற்றம் எதிரொலி: மீனவர்கள் 5-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை - பொதுமக்கள் சில்வர் பீச்சுக்கு செல்ல தடை
x
தினத்தந்தி 16 Dec 2018 11:30 PM GMT (Updated: 16 Dec 2018 11:13 PM GMT)

கடலூரில் தொடர்ந்து கடல் சீற்றமாக இருக்கிறது. இதன் எதிரொலியாக நேற்று 5-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. பொதுமக்கள் சில்வர் பீச்சுக்கு செல்ல போலீசார் தடை விதித்தனர்.

கடலூர், 

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டு இருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது சென்னைக்கு தென்கிழக்கே நிலை கொண்டு புயலாக மாறியது. இந்த புயல், ஆந்திராவின் ஓங்கோல்- காக்கிநாடா இடையே இன்று (திங்கட் கிழமை) பிற்பகலில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

மேலும் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், தரைக்காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் அவ்வப்போது வீசக்கூடும். இதன் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதன் எதிரொலியாக வட கடலோர மாவட்டமான கடலூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் நேற்று தேவனாம்பட்டினம், தாழங்குடா, துறைமுகம் உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில் தரைக்காற்று பலமாக வீசியது. கடல் சீற்றம் அதிகரித்து காணப்பட்டது. ராட்சத அலைகள் எழுந்து பாறாங்கற்கள் மீது மோதி வருவதால், அந்த பகுதிகளில் மண் அரிப்பு ஏற்பட்டு அந்த பகுதியில் பதிக்கப்பட்டு இருந்த பாறாங்கற்கள் சரிந்து சிதறி கிடக்கின்றன. இதனால் தேவனாம்பட்டினம் ஊருக்குள் தண்ணீர் செல்லும் வாய்ப்பு உள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.

கடல் சீற்றம் காரணமாக, தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சுக்கு பொதுமக்கள் செல்ல போலீசார் தடை விதித்தனர். இது பற்றி ஒலிப்பெருக்கி மூலமாக போலீசார் எச்சரிக்கை செய்த வண்ணம் இருந்தனர். மேலும் கடற்கரையோரம் நின்று கொண்டிருந்த பொதுமக்களையும் அவர்கள் பாதுகாப்பு கருதி அங்கிருந்து வெளியேற செய்தனர்.

தொடர்ந்து கடல் சீற்றமாக இருப்பதால் கடலூர் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் விசை மற்றும் பைபர் படகு மீனவர்கள் யாரும் நேற்று 5-வது நாளாக மீன் பிடிக்க செல்லவில்லை. அவர்கள் தங்கள் படகுகளை துறைமுக பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்கும் பணியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடலூர் துறைமுகம் பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.

இதுகுறித்து துறைமுக அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, கடலூரில் நேற்று 35 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசியது. மேலும் கடல் அலைகள் 3 மீட்டர் உயரத்துக்கு எழுந்த நிலையில் இருந்தது. தொடர்ந்து கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று தெரிவித்தார். 

Next Story