ரூ.19¾ கோடி மோசடி வழக்கு: நூல் மில் உரிமையாளர் கைது


ரூ.19¾ கோடி மோசடி வழக்கு: நூல் மில் உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 17 Dec 2018 3:45 AM IST (Updated: 17 Dec 2018 5:23 AM IST)
t-max-icont-min-icon

ரூ.19¾ கோடி மோசடி செய்த வழக்கில் நூல் மில் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர், 

திருப்பூரில் ஏற்றுமதி நிறுவனம் வைத்து நடத்தி வருபவர் நடராஜன். இவர் வெளிநாடுகளுக்கு ஆடைகளை அனுப்பிவைத்து அங்குள்ள வர்த்தகர்கள் அதை பெற்றதும் அதற்கான வங்கி ஆவணங்களை திருப்பூரில் உள்ள உரிமையாளர்களுக்கு அனுப்பிவைப்பார்கள். அந்த ஆவணங்களை திருப்பூரில் உள்ள சம்பந்தப்பட்ட வங்கியில் கொடுத்து பனியன் உரிமையாளர்கள் ஆர்டருக்கான தொகையை பெறுவது வழக்கம்.

இந்த நிலையில் நடராஜனுக்கு தெரிந்த நபரான திருப்பூரை சேர்ந்த ராஜேஷ் கண்ணா(வயது 32) என்பவர் திருப்பூரை சேர்ந்த செந்தில்குமார் மற்றும் அவருடைய மனைவி பிரியா ஆகியோர் துணையுடன் போலியாக ஆவணங்கள் தயாரித்து வெளிநாடுகளுக்கு சரக்குகளை அனுப்பி வைக்காமலேயே கோடிக்கணக்கான பணத்தை வங்கியில் இருந்து பெற்று மோசடி செய்துள்ளனர்.

அதுபோல் நடராஜனை ஏமாற்றி அவருடைய பனியன் நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டு ரூ.6 கோடியே 12 லட்சத்தை கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருப்பூர் மங்கலம் ரோட்டில் உள்ள கார்ப்பரேஷன் வங்கியில் இருந்து பெற்று மோசடி செய்துள்ளனர். இதன்படி இவர்கள் மொத்தம் ரூ.19¾ கோடி அளவிற்கு மோசடி செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து நடராஜன் கொடுத்த புகாரின் பேரில் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமார், அவருடைய மனைவி பிரியா, கார்ப்பரேஷன் வங்கி மேலாளர் சோமாஜூலு ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய கோவையை சேர்ந்த வங்கி மேலாளராக இருந்த சங்கர் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் மோசடி வழக்கில் தொடர்புடைய ராஜேஷ்கண்ணாவை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். ராஜேஷ்கண்ணா திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியில் நூல் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார்.

இந்த மோசடி தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல், நூல்மில் உரிமையாளரான ராஜேஷ் கண்ணாவை நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார். 

Next Story