சென்னை-பாலக்காடு ரெயிலில், என்ஜினில் இருந்து கழன்று ஓடிய பெட்டிகள் - பீதியில் பயணிகள் அலறல்


சென்னை-பாலக்காடு ரெயிலில், என்ஜினில் இருந்து கழன்று ஓடிய பெட்டிகள் - பீதியில் பயணிகள் அலறல்
x
தினத்தந்தி 17 Dec 2018 3:45 AM IST (Updated: 17 Dec 2018 5:23 AM IST)
t-max-icont-min-icon

சென்னை- பாலக்காடு ரெயிலில், என்ஜினில் இருந்து பெட்டிகள் கழன்று ஓடியதால் பயணிகள் பீதியில் அலறினர்.

திண்டுக்கல், 

சென்னை சென்டிரல்- பாலக்காடு இடையே திண்டுக்கல், பழனி வழியாக தினமும் அதிவிரைவு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் சென்னையில் இருந்து புறப்பட்டு தினமும் காலை 6 மணிக்கு திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு வரும். பின்னர் அங்கு என்ஜின் மாற்றப்பட்டு, பழனி வழியாக பாலக்காட்டுக்கு புறப்பட்டு செல்லும்.

அதன்படி நேற்று காலை அந்த ரெயில் திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு வந்தது. ரெயிலில் 20 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தன. விடுமுறை தினம் என்பதால் ரெயிலில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. என்ஜின் மாற்றப்பட்டு காலை 6.30 மணிக்கு பாலக்காட்டுக்கு அந்த ரெயில் புறப்பட்டது.

மிகவும் குறைந்த வேகத்தில் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் வெளியே வந்தபடி இருந்தது. அப்போது என்ஜினுடன் இணைக்கப்பட்டு இருந்த பெட்டிகள் திடீரென தனியாக கழன்றன. இதனால் என்ஜினும், அதைத்தொடர்ந்து பெட்டிகளும் தனித் தனியாக ஓடத்தொடங்கின. அதை பார்த்ததும் ரெயிலில் இருந்த பயணிகள் அச்சத்தில் அலற தொடங்கினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

என்ஜினை நிறுத்தினால், பெட்டிகள் அதனுடன் மோதி விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது. இதற்கிடையே குறைந்த வேகத்தில் சென்றதால் சுமார் 50 அடி தூரம் செல்வதற்குள் ரெயில் பெட்டிகள் தானாக நின்று விட்டன. இதையடுத்து என்ஜினும் நிறுத்தப்பட்டது. ரெயிலில் இருந்த பயணிகள் பதற்றத்துடன் இறங்கினர்.

குறைந்த வேகத்தில் என்ஜின் இயக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுபற்றி அறிந்ததும் ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில் பெட்டிகளை, என்ஜினுடன் சரியாக இணைக்காததால் பெட்டிகள் கழன்று தனியாக ஓடியது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து தனியாக கழன்று ஓடிய பெட்டிகளுடன், என்ஜின் மீண்டும் இணைக்கப்பட்டது. பின்னர் காலை 6.45 மணிக்கு அந்த ரெயில் பாலக்காட்டுக்கு புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் காரணமாக, திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

Next Story