பொங்கல் பண்டிகைக்கு மஞ்சள் செடிகள் தயார்
பொங்கல் பண்டிகைக்கு தேவையான மஞ்சள் செடிகள் அறுவடைக்கு தயாராக உள்ளது.
சிறுபாக்கம்,
தமிழர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் விழாக்களில் முக்கியமானது தைப்பொங்கல். உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் விழா இதுவாகும். இத்திருநாளில் இனிக்கும் கரும்புக்கும், மங்களம் தரும் மஞ்சளுக்கும் தனி இடம் உண்டு. ஏனெனில் மஞ்சள் இருக்கும் இடத்தில் திருமகள் வாசம் செய்கிறாள் என்பார்கள். அதனால் தான் மங்களகரமான நிகழ்ச்சிகளில் மஞ்சளின் பங்கு தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. எனவே தான் தை முதல் நாள் மண் பானையில் மஞ்சள் கொத்து கட்டி, பொங்கலிட்டு சூரியனை வழிபடுவது வழக்கம்.
இதற்காக மஞ்சள் கொத்துகள் சந்தைகளுக்கு அதிகளவில் விற்பனைக்காக கொண்டு வரப்படும். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 27 நாட்களே உள்ளது. இதனால் இந்த பண்டிகையை குறிவைத்து கரும்பு, மஞ்சள் பயிர் செய்த விவசாயிகள் தங்களை அறுவடைக்கு தயார்படுத்தி வருகிறார்கள்.
கடலூர் மாவட்டத்தில் சிறுபாக்கம் பகுதியில் பொங்கல் பண்டிகையை எதிர்நோக்கி மஞ்சள் சாகுபடி செய்யப்படும். அதன்படி கடந்த 10 மாதத்திற்கு முன்பே விவசாயிகள் தங்களது நிலத்தில் மஞ்சள் சாகுபடி செய்தனர். சுமார் ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இன்னும் 15 நாட்களுக்கு பிறகு அறுவடை செய்யப்பட இருக்கிறது.
அறுவடை செய்யப்படும் மஞ்சள், சேலம் மாவட்டம் ஆத்தூர், தலைவாசல், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி, சின்னசேலம் மற்றும் விருத்தாசலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட இருக்கிறது.
பொங்கல் பண்டிகைக்கு போக மீதம் உள்ள மஞ்சள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள மஞ்சள் மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும். மங்கள பொருளான மஞ்சளில் மருத்துவ குணமும் நிறைந்தது. மேலும் உணவு, அழகு சாதனங்கள் அனைத்திலும் மஞ்சள் பயன்படுத்துவதால் எப்போதுமே இதுக்கு மவுசுதான் என்கின்றனர் விவசாயிகள்.
Related Tags :
Next Story