வெம்பக்கோட்டை பகுதியில் இருந்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாகும் பிரண்டை செடி


வெம்பக்கோட்டை பகுதியில் இருந்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாகும் பிரண்டை செடி
x
தினத்தந்தி 17 Dec 2018 5:59 AM IST (Updated: 17 Dec 2018 5:59 AM IST)
t-max-icont-min-icon

வெம்பக்கோட்டை பகுதியில் இருந்து பிரண்டை செடிவெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது வேலை இழந்து தவித்து வரும் பட்டாசு ஆலை தொழிலாளர்கள் இதன்மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர்.

தாயில்பட்டி,

வயல்வெளியில் பயிரிட்டு உரமிட்டு, பூச்சி மருந்து தெளித்து, நீர் பாய்ச்சி, களை எடுத்து அதன் பிறகு அறுவடை செய்யும் நிலை பிரண்டை செடிக்கு இல்லை. கள்ளி வகையை சேர்ந்த பிரண்டை ஓடை, வேலி மற்றும் பொட்டல் வெளிகளிலும் வளரக்கூடியது.

இது பல மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. பசியை தூண்டுவதோடு எலும்பு வளர்ச்சிக்கு துணை நிற்கிறது. பல நோய்களுக்கு மருந்தாகிறது. இதன் மருத்துவகுணம் தெரியவந்ததும் இதற்கு மவுசு அதிகரித்து விட்டது. தீண்டாத செடியாக கருதப்பட்ட இந்த செடியை கிராமத்தினர் ஒரு பொருட்டாக கருதாத நிலையில் நகர்ப் புறங்களில் இதன் தேவை அதிகரித்து வருகிறது. மேலும் வெளிநாடுகளிலும் கடும் கிராக்கி உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு வெம்பக்கோட்டை பகுதியில் மனோகரன் என்பவர் இதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார். இங்கிருந்து இத்தாலி, ஜெர்மனி, பிரான்சு, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் வட மாநிலங்களுக்கும் செல்கிறது.

இந்த செடியை பிடுங்கி சூரிய ஒளியில் 8 தினங்கள் காயவைத்து எந்திரம் மூலம் சிறு,சிறு துண்டுகளாக நறுக்கி கல், மண் நீக்கி அனுப்புகின்றனர். இந்த தொழிலுக்கு எந்திரம் வாங்கிட அரசு 50 சதவீதம் வரை மானியம் வழங்குவதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது வேலையின்றி தவிக்கும் பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு பிரண்டை கைகொடுத்து வருகிறது. ஆங்காங்கே வளர்ந்துள்ள பிரண்டை செடியை தேடிப்பிடித்து அறுவடை செய்து டிராக்டர் மற்றும் சரக்கு வாகனங்களில் ஏற்றி கொண்டுவந்து கொடுக்கின்றனர். இதனால் தங்களுக்கு தினமும் ரூ.400 வரை கிடைப்பதாக மகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.

Next Story