கடலாடி, முதுகுளத்தூரில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்


கடலாடி, முதுகுளத்தூரில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்
x
தினத்தந்தி 17 Dec 2018 6:48 AM IST (Updated: 17 Dec 2018 6:48 AM IST)
t-max-icont-min-icon

கடலாடி மற்றும் முதுகுளத்தூரில் மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் மணிகண்டன் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

சாயல்குடி,

கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி தலைமை தாங்கினார். கடலாடி முன்னாள் யூனியன் தலைவர் முனியசாமி பாண்டியன், முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் வரவேற்று பேசினார்.

விழாவில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மணிகண்டன் கலந்து கொண்டு கடலாடி தாலுகாவில் உள்ள உச்சிநத்தம், சாயல்குடி, டி.எம்.கோட்டை, மேலக்கிடாரம், சிக்கல், மாரியூர் உள்பட 11 அரசு பள்ளிகளில் படிக்கும் 2 ஆயிரத்து 541 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

அதனை தொடர்ந்து விழாவில் அமைச்சர் பேசியதாவது:- கடலாடியில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும். கடலாடி தாலுகாவில் உள்ள தரமற்ற சாலைகளை சரிசெய்ய ரூ.10 கோடி நிதி ஒதுக்கி விரைவில் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இப்பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் 2017-18-க்கான பயிர் இழப்பீட்டு தொகையை விரைவில் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.

இப்பகுதியில் உள்ள குறைகளை சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்றத்தில் முறையிட்டால் தான் என்னால் இப்பகுதிக்கு தேவையான உதவிகளை செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் கடலாடி அ.தி.மு.க. அவை தலைவர் வேல்ச்சாமி, ஒன்றிய பிரதிநிதி ராமர், ஊராட்சி செயலாளர்கள் போஸ், செல்லச்சாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் குமரையா, போஸ், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ராஜேந்திரன், சத்தியமூர்த்தி,அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வேலுச்சாமி, கடலாடி வட்டாரத்தலைவர் தனசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி நன்றி கூறினார்.

இதேபோல முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகுளத்தூர், அலங்கானூர், கீழத்தூவல், காக்கூர், திருவரங்கம், செல்வநாயகபுரம், தேரிருவேலி ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் படிக்கும் ஆயிரத்து 503 மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சர் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். தலைமை ஆசிரியை உமா மகேசுவரி அனைவரையும் வரவேற்றார். விழாவில் முதன்மை கல்வி அதிகாரி முருகன், மாவட்ட கல்வி அதிகாரி பாலதண்டாயுதம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, உதவி அலுவலர் கயிலைசெல்வம், ஆசிரியர்கள் மங்களநாதன், சிவக்குமார், நிலவள வங்கி தலைவர் தர்மர், அமைச்சரின் உதவியாளர் சண்முகபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story