ராமேசுவரத்தில் ரூ.6 கோடியே 70 லட்சம் செலவில் புதிய கோர்ட்டு கட்டிடம்; ஐகோர்ட்டு நீதிபதிகள் அடிக்கல் நாட்டினர்


ராமேசுவரத்தில் ரூ.6 கோடியே 70 லட்சம் செலவில் புதிய கோர்ட்டு கட்டிடம்; ஐகோர்ட்டு நீதிபதிகள் அடிக்கல் நாட்டினர்
x
தினத்தந்தி 17 Dec 2018 1:22 AM GMT (Updated: 17 Dec 2018 1:22 AM GMT)

ராமேசுவரத்தில் ரூ.6 கோடியே 70 லட்சம் செலவில் புதிய கோர்ட்டு கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் ஐகோர்ட்டு நீதிபதிகள் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் கடந்த 2000-ம் ஆண்டு மாவட்ட உரிமையியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தொடங்கப்பட்டது. வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த இந்த நீதிமன்றத்துக்கு சொந்த கட்டிடம் கட்ட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. அதனை தொடர்ந்து தற்போது புதிய கட்டிடம் கட்டுவதற்கு அரசு சார்பில் ரூ.6 கோடியே 70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ராமேசுவரம் நொச்சிவாடி பகுதியில் இதற்காக சுமார் 3½ ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுஉள்ளது. இதில் கோர்ட்டு வளாகம், நீதிபதிகள் குடியிருப்பு, நீதிமன்ற விருந்தினர் இல்லம் ஆகியவை கட்டப்பட உள்ளன.

இதையடுத்து புதிய நீதிமன்ற கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ராமேசுவரத்தில் நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி கயல்விழி அனைவரையும் வரவேற்று பேசினார். பொதுப்பணித்துறை சூப்பிரண்டு என்ஜினீயர் செல்வராஜ் திட்ட அறிக்கை வாசித்தார். விழாவில் ஐகோர்ட்டு நீதிபதிகள் சுப்பிரமணியன், பி.டி.ஆஷா, தமிழக தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மணிகண்டன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றிவைத்து அடிக்கல் நாட்டி கல்வெட்டை திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா, ராமேசுவரம் வக்கீல் சங்க தலைவர் ஜோதிமுருகன், செயலாளர் பிரபாகர் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

அதனை தொடர்ந்து அமைச்சர் மணிகண்டன் பேசியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டக்கல்லூரி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கான கட்டிடம் கட்டுவதற்கு ரூ.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தை சேர்ந்த 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வெளிநாடுகளில் உள்ளனர். இவர்கள் வந்து செல்ல வசதியாக உச்சிப்புளியில் பயணிகள் விமான சேவை தொடங்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. கச்சத்தீவை திரும்ப பெறுவது தொடர்பாக மத்திய அரசை மாநில அரசு மூலம் வலியுறுத்துவேன். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் ஐகோர்ட்டு நீதிபதிகள் சுப்பிரமணியன், ஆஷா ஆகியோர் பேசியதாவது:-

வக்கீல்கள் மனிதாபிமானத்தோடு செயல்பட வேண்டும். தங்களது கடமையை நினைவில் வைத்து செயல்பட வேண்டும். குற்றம் செய்தவர்களோ, குற்றம் சுமத்தப்பட்டவர்களோ அல்லது பாதிக்கப்பட்டவர்களோ தான் வக்கீல்களிடம் வருவார்கள். இளம் வக்கீல்கள் அதிகம் பேர் உள்ளர்கள்.

உங்களை நாடி வருபவர்களிடம் மனிதாபிமானத்தோடு நடந்து கொண்டு தக்க ஆலோசனைகளை வழங்க வேண்டும். வக்கீல்கள் அலுவலகத்தில் இருக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும். பெண் வக்கீல்கள் அதிகஅளவில் வரவேண்டும். நீதித்துறை வலுவிழந்தால் ஜனநாயகமே வலுவிழந்து விடும். எனவே நீதிபதிகளும், வக்கீல்களும் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

முன்னதாக ராமநாதபுரம் சார்பு நீதிபதி பிரீத்தா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதில் ராமேசுவரம் கோர்ட்டு நீதிபதி ஜெயசூர்யா, வாலாந்தரவை முன்னாள் ஊராட்சி தலைவர் ராமமூர்த்தி, ஒப்பந்தகாரர்கள் சுப்பிரமணியன், வீரபூபதி உள்பட வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் நீதிபதி சிவப்பிரகாசம் நன்றி கூறினார்.

Next Story