ரபேல் போர் விமான விவகாரம்: காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் - பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் அறிவிப்பு
ரபேல் போர் விமான விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை இன்று (திங்கட்கிழமை) முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ரபேல் ராணுவ போர் விமானம் வாங்குவதில் முறைகேடு நடந்து இருப்பதாக மத்திய அரசு மீதும், பிரதமர் நரேந்திர மோடி மீதும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி மத்திய அரசுக்கு களங்கம் ஏற்படுத்தி வந்தார். இந்த நிலையில் இது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ரபேல் போர் விமானம் வாங்கியதில் மத்திய அரசு மிகவும் நேர்மையாக நடந்து இருப்பதாக தீர்ப்பு வழங்கி உள்ளது.
எனவே ஊழலில் திளைத்துள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பா.ஜ.க. அரசு மீது பொய்யான பிரசாரம் மேற்கொண்டு வருவதை புதுச்சேரி பா.ஜ.க. வன்மையாக கண்டிக்கிறது. தீர்ப்பு வழங்கியுள்ள நீதிபதிகளே இந்த வழக்கு வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு எதிர்க்கட்சிகள் ஜோடித்திருக்கும் பொய்யான குற்றச்சாட்டு என்று கூறியுள்ளதை புதுச்சேரி பா.ஜ.க. வரவேற்கிறது.
சுதந்திர இந்தியாவில் ஒரு ரூபாய் கூட ஊழல் இல்லாத ஆட்சி நடத்தி வரும் பிரதமர் மோடி மீதும் மத்திய அரசு மீதும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஊழல் மிகுந்த காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பொய் பிரசாரம் செய்து வருவதை கண்டித்து இன்று(திங்கட்கிழமை) காலை 9 மணி அளவில் புதுச்சேரி பா.ஜ.க. சார்பாக கண்டன ஊர்வலம் நடத்த உள்ளோம்.
புதுச்சேரி நேரு வீதியில்் தொடங்கும் இந்த ஊர்வலம் புதுச்சேரி வைசியாள் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நிறைவு பெறும். அங்கு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story