ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு சட்டத்தை சரியாக கையாள வேண்டும் - கமல்ஹாசன் பேட்டி
ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு சட்டத்தை சரியாக கையாள வேண்டும் என்று கமல்ஹாசன் கூறினார்.
மதுரை,
மதுரை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
கஜா புயலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. நிவாரணப்பணிகள் மேற்கொள்வதில் அரசின் செயல்பாடு குறையாகவே உள்ளது. கஜா புயல் பாதிப்பிற்கான நிவாரண தொகையை பெற மத்திய அரசுக்கு, மாநில அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். பேசிக்கொண்டிருந்தால் நிவாரண தொகை கிடைக்காது. அதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், புயல் பாதிக்கப்பட்ட இடங்களை பாதி தலைவர்கள் நேரில் சென்றுகூட பார்க்கவில்லை. கருணாநிதிக்கும் எனக்குமான உறவு என்ன என்பதை சிலை திறப்பு விழாவிற்கு சென்று தான் நிரூபிக்க வேண்டும் என்பது கிடையாது. அதற்கான அவசியமும் இல்லை.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் என்பது ஏற்கமுடியாத ஒன்று. போராட்டம் மூலம் செல்லாமல் சட்டம் மூலமாக தான் செல்ல வேண்டும். போராட்டம் மூலம் வந்த விளைவை நாம் ஒரு முறை பார்த்து அனுபவித்திருக்கிறோம். இந்த விவகாரத்தில் தமிழக அரசு சட்டத்தை சரியாக கையாள வேண்டும். அழுத்தமான சட்டத்தினை பயன்படுத்தி ஸ்டெர்லைட் வழக்கை கையாள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.