அடுத்த மாதம் திருமணம்: மகள், மனைவியை கொன்று தொழிலாளி தற்கொலை


அடுத்த மாதம் திருமணம்: மகள், மனைவியை கொன்று தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 17 Dec 2018 2:00 AM GMT (Updated: 17 Dec 2018 1:45 AM GMT)

அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்தநிலையில் புதுவையில் மகள், மனைவியை கொன்று தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். பூட்டிய வீட்டுக்குள் பிணங்கள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி,

புதுச்சேரி பெரியார்நகர் சங்கோதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 60). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. மது குடிக்கும் பழக்கம் உடையவர். கடந்த சில ஆண்டுகளாக சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இவரது மனைவி வனஜா(50). இவர்களுக்கு வெங்கடேஸ்வரி, ஹேமலதா, தீபாவதி(23) என 3 மகள்கள் உள்ளனர். இதில் வெங்கடேஸ்வரி, ஹேமலதா ஆகிய 2 பேருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது.

தீபாவதி மாலத்தீவில் வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அவர் புதுவை திரும்பினார். தற்போது புதுவை மூலக்குளத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு அடுத்த மாதம் (ஜனவரி) 27-ந் தேதி திருமணம் நடப்பதாக இருந்தது. இதற்காக உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ்களை கொடுத்து வந்தனர்.

அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியுடன் பாலகிருஷ்ணன் சண்டை போடுவது வழக்கம். இதேபோல் நேற்று முன்தினம் இரவும் தகராறு ஏற்பட்டது. இதனை வழக்கமான சண்டை தான் என அருகில் இருந்தவர்கள் கருதினர். நேற்று காலை வெகுநேரமாகியும் பாலகிருஷ்ணன் வீட்டு கதவு திறக்கப்படாமல் இருந்தது.

இந்தநிலையில் நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்த ஒரு சிறுவன், வீட்டுக்குள் பாலகிருஷ்ணன் தூக்குப்போட்டு தொங்கியதை பார்த்து அருகில் உள்ளவர்களிடம் தெரிவித்தான். உடனே அவர்கள் அந்த வீட்டின் கதவை திறக்க முயன்றபோது உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதன்பேரில் உருளையன்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்ததில் பாலகிருஷ்ணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பூட்டப்பட்டு கிடந்த மற்றொரு அறையின் கதவின் அடிப்பகுதி வழியாக ரத்தம் வெளியே வந்து உறைந்து கிடந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த கதவை திறந்து பார்த்தனர். அங்கு வனஜாவும், தீபாவதியும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். அவர்கள் கட்டையால் அடித்தும், கத்தியால் கழுத்தை அறுத்தும் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.

இந்த பயங்கர சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதைத்தொடர்ந்து ஏராளமானோர் அந்த வீட்டின் முன் கூடினர். இதனால் அங்கு மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

இது பற்றிய தகவல் அறிந்து போலீஸ் ஐ.ஜி. சுரேந்தர்சிங் யாதவ், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால், கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன், உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மகள் தீபாவதிக்கு அடுத்த மாதம் நடைபெற இருந்த திருமணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டதும், இதனால் ஆத்திரமடைந்து மனைவி, மகளை கொலை செய்து விட்டு பாலகிருஷ்ணன் தற்கொலை செய்து இருக்க வேண்டும் என்று தெரிகிறது.

மனைவி, மகளை கொலை செய்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டதற்கு இதுதான் காரணமா? அல்லது வேறு ஏதும் பிரச்சினையா? என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story