கேரளாவுக்கு கடத்த முயன்ற 2½ டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல் அதிகாரிகள் 20 கிலோ மீட்டர் துரத்தி பிடித்தனர்


கேரளாவுக்கு கடத்த முயன்ற 2½ டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல் அதிகாரிகள் 20 கிலோ மீட்டர் துரத்தி பிடித்தனர்
x
தினத்தந்தி 17 Dec 2018 10:45 PM GMT (Updated: 17 Dec 2018 3:11 PM GMT)

கேரளாவுக்கு கடத்த முயன்ற 2½ டன் ரே‌ஷன் அரிசியை பறக்கும்படை அதிகாரிகள் 20 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று பிடித்தனர்.

புதுக்கடை,

குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரே‌ஷன் அரிசி, மண்எண்ணெய், மணல், போன்றவை கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க போலீசார் மாவட்டத்தின் எல்லையில் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணித்து வருகிறார்கள். மேலும், வருவாய்த்துறை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் ரோந்து சென்று கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்கிறார்கள்.

ஆனாலும், கடத்தல்காரர்கள் சொகுசு கார் மூலமாகவும், லாரி, டெம்போக்களில் தார்பாய் மூலம் மூடியும் நூதன முறையில் கடத்தலில் ஈடுபடுகிறார்கள். அவற்றையும் அதிகாரிகள் அடையாளம் கண்டு பறிமுதல் செய்கிறார்கள்.

இந்தநிலையில், குமரி மாவட்ட பறக்கும்படை தனி தாசில்தார் ராஜசேகர், துணை தாசில்தார் முருகன், வருவாய் ஆய்வாளர் ரதன் ராஜ்குமார் ஆகியோர் நேற்று முன்தினம் நள்ளிரவில் ராஜாக்கமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக ஒரு மினி டெம்போ தார்பாயால் மூடி, மீன் பெட்டிகள் வைக்கப்பட்ட நிலையில் சென்றது.

அந்த மினி டெம்போவை நிறுத்துமாறு அதிகாரிகள் சைகை காட்டினர். ஆனால், அது நிற்காமல் வேகமாக சென்றது. இதனால், சந்தேகம் அடைந்த அதிகாரிகள் தங்களது வாகனத்தில் துரத்தி சென்றனர்.

சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று தேங்காப்பட்டணம் பகுதியில் வைத்து       மடக்கி பிடித்த னர். உடனே, வண்டியை நிறுத்திவிட்டு டிரைவர் இறங்கி தப்பி ஓடினார். தொடர்ந்து மினி டெம்போவை சோதனை செய்த போது, தார்ப்பாய்க்கு அடியில் மூடைகளில் 2½ டன் ரே‌ஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இந்த அரிசி கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து அரிசியையும், வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். அரிசியை காப்புக்காடு அரசு குடோனிலும், மினி டெம்போவை கல்குளம் தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைத்தனர். மேலும், தப்பி ஓடிய டிரைவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story