திண்டுக்கல்லில், தந்தை இறந்த துக்கத்தில் - என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தற்கொலை


திண்டுக்கல்லில், தந்தை இறந்த துக்கத்தில் - என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தற்கொலை
x
தினத்தந்தி 18 Dec 2018 3:30 AM IST (Updated: 17 Dec 2018 10:24 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில், தந்தை இறந்த துக்கத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் நாயக்கர்புதுத்தெருவை சேர்ந்தவர் கந்தவேல். அவருடைய மனைவி மீனா கோகிலா. இவர்களுடைய மகன் நாகபிரபு (வயது 21). இவர், திண்டுக்கல் அருகே உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் இறுதி ஆண்டு படித்து வந்தார். குடும்பத்தகராறு காரணமாக கடந்த 15 ஆண்டுகளாக கந்தவேலுவும், மீனா கோகிலாவும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

மீனா கோகிலா, தேனி மாவட்டம் கம்பத்தில் வசித்து வருகிறார். திண்டுக்கல்லில் உள்ள வீட்டில் கந்தவேலும், நாகபிரபுவும் வசித்து வந்தனர். இதற்கிடையே கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் கந்தவேல் இறந்துவிட்டார். இதனால் வீட்டில் நாகபிரபு மட்டும் தனியாக வசித்து வந்தார். அவ்வப்போது மீனா கோகிலா திண்டுக்கல்லுக்கு வந்து தனது மகனை பார்த்து செல்வது வழக்கம்.

தாய் தன்னுடன் இல்லாததால் நாகபிரபு மன உளைச் சலில் இருந்தார்.

மேலும் தன்னுடன் வசித்த தந்தையும் இறந்துவிட்டதால், அவர் கடந்த சில மாதங்களாக சோகமாகவே காணப்பட்டார். வீட்டின் அருகில் வசிக் கும் உறவினர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவருடைய வீட்டு கதவு திறக்கப்படவில்லை. இதனால் உறவினர் ஒருவர், வீட்டின் கதவை தட்டினார்.

கதவு திறக்காததால், சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, படுக்கை அறையில் நாகபிரபு வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தார். இதுகுறித்து திண்டுக்கல் மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை இறந்த சோகத்தில் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Next Story