வாகன ஓட்டிகள் திருந்தாவிட்டால் விபத்துகள் குறையாது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு பேச்சு
வாகன ஓட்டிகளாக பார்த்து திருந்த முன்வராவிட்டால் விபத்துகள் குறையாது என்று போலீஸ் சூப்பிரண்டு அருளரசு கூறினார்.
ராசிபுரம்,
ராசிபுரத்தில் விபத்து மற்றும் குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு தலைமை தாங்கினார். ராசிபுரம் தாசில்தார் சாகுல் ஹமீது, ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன், வெண்ணந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு அருளரசு பேசியதாவது:- தமிழக அரசு சார்பில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத்தை பெற காலக்கெடு கிடையாது. விபத்து நடந்து நீண்ட காலம் ஆகி இருந்தாலும் இந்த நிவாரணத்தை பெற பாதிக்கப்பட்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். விபத்தில் கொடுங்காயம் அடைந்தபோது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றதற்கான ஆவணங்களை கொண்டு நிவாரண தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
அதேபோல் விபத்திற்காக காப்பீட்டு தொகைக்கு விண்ணப்பம் செய்தாலும், நிவாரண தொகைக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை. மேலும் விபத்து வழக்குகளின் நிலை குறித்து அறிய நீங்கள் போலீஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் பகுதியில் உள்ள இ-சேவை மையத்திற்கு சென்று வழக்கின் நிலையை தெரிந்து கொள்ளலாம்.
விபத்துக்களை தடுக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும், செல்போன் பேசாமல் வாகனங்களை ஓட்டுவது குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல் கல்வி நிறுவன வாகனங்களின் டிரைவர்களுக்காக போக்குவரத்து துறை மற்றும் போலீசார் சார்பில் விழிப்புணர்வு கூட்டங்களும், கண் பரிசோதனை முகாம்களும் நடத்தப்பட்டு உள்ளது. விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மட்டும் பயன் அளிக்காது. வாகன ஓட்டிகளாக பார்த்து திருந்த முன்வராவிட்டால் விபத்துகள் குறையாது. எனவே போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற அவர்கள் முன்வர வேண்டும்.
இதுவரை நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டங்களில் 678 பேர் பங்கேற்று ஆலோசனைகளை பெற்று உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதைத்தொடர்ந்து நடந்த கூட்டத்தில் விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு அருளரசு பதில் அளித்து பேசினார். இதற்கிடையே பொதுமக்களுக்கு வழிகாட்டும் இது போன்ற கூட்டங்களை போலீசார் தொடர்ந்து நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story