மோகனூர் அருகே கோழிப்பண்ணை அதிபரை தாக்கிய 30 பேர் மீது வழக்கு வாலிபர் கைது
மோகனூர் அருகே, கோழிப்பண்ணை அதிபரை தாக்கிய 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மோகனூர்,
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள மூங்கில்பட்டி பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வருபவர் ராஜேந்திரன் (வயது 51). இவர் தனக்கு சொந்தமான காரில் சென்று கொண்டிருந்தபோது இவருக்கு பின்புறமாக இருந்து வந்த மினி ஆட்டோ ஒன்று இவர் கார் மீது மோதியதில் நிலைதடுமாறிய ராஜேந்திரன் கார் சாலையோரம் இறங்கி விட்டது.
அப்போது ஏன் இவ்வாறு வருகிறீர்கள்? என்று கேட்டபோது ஆட்டோ ஓட்டி வந்த டிரைவர் நொச்சிபட்டியைச் சேர்ந்த சேதுபதி (24) என்பவருக்கும், ராஜேந்திரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சேதுபதி அந்த பகுதியில் உள்ள அவரது நண்பர்கள், உறவினர்களை அழைத்து வந்து, ராஜேந்திரன் கோழிப்பண்ணைக்குள் அத்துமீறி நுழைந்து அவரை தாக்கியதாகவும், அருகில் இருந்த பண்ணைக்குள் ஓடி ராஜேந்திரன் உயிர் தப்பியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து ராஜேந்திரன், தன்னை தாக்கியதோடு தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கொடுத்த புகாரின் பேரில், மோகனூர் போலீசார், சேதுபதி, சின்னப்பெத்தாம்பட்டியைச் சேர்ந்த அசோக், கார்த்தி, மற்றொரு கார்த்தி, மூங்கில்பட்டியைச் சேர்ந்த ரவி, முருகன் என்கிற முருகேசன் உட்பட 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக முருகன் என்கிற முருகேசனை (27) போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story