ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து அகற்றப்படும் தாமிர தாதுவை வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல கப்பல் வந்தது தூத்துக்குடி கலெக்டர் தகவல்
ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து அகற்றப்படும் தாமிர தாதுவை வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல கப்பல் வந்துள்ளது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் பல்வேறு நிபந்தனைகளுடன் உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த உத்தரவின் மீது மேல்முறையீடு செய்யப்போவதாக முதல்-அமைச்சர் அறிவித்து உள்ளார். அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படுகிறது. இதனால் இறுதியாக உச்சநீதிமன்றத்தில் என்ன தீர்ப்பு வருகிறதோ அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேல்முறையீடு செய்வதால், தற்போது தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளவைகளை கடைபிடிக்கப்போவது இல்லை.
தூத்துக்குடியில் பல்வேறு மக்கள் அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஸ்டெர்லைட் தொடர்பாக மனு கொடுத்து உள்ளனர். இந்த மனுக்கள் அனைத்தும் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.
தூத்துக்குடியில் பல்வேறு முக்கிய இடங்களில் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மக்கள் ஏதாவது போராட்டம், ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டுமென்றால், போலீசில் விண்ணப்பித்து, அனுமதி பெற்று போராட்டம் மூலம் எதிர்ப்பை தெரிவிக்கலாம்.
இந்த தீர்ப்பு வந்து 2 நாட்கள் ஆகி உள்ளது. இதுவரை இயல்பான சூழல் உள்ளது. இந்த நிலை தொடரும். 144 உத்தரவு பிறப்பிக்கும் நிலை வராது.
ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ரசாயன பொருட்கள் அகற்றப்பட்டு வந்தன. அதன்படி ஆலையில் இருந்து தாமிர தாதுவை அகற்றவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. தற்போது சுமார் 66 ஆயிரம் டன் தாமிரதாது ஆலையின் உள்ளே இருந்தது. இந்த தாமிர தாதுவை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த தாதுவை வெளிநாட்டுக்கு கொண்டு செல்வதற்காக கப்பல் வரவழைக்கப்பட்டு உள்ளது. அந்த கப்பல் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி ஆலையில் இருந்து 100 டன் தாமிரதாது கப்பலில் ஏற்றப்பட்டு உள்ளது. தொடர்ந்து தாமிர தாது அகற்றும் பணி நடந்து வருகிறது.
மேலும் போராட்டத்துக்கு மாணவர்கள், பொதுமக்களை யாரும் தூண்டிவிடக்கூடாது. இதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, உதவி கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் மத தலைவர்கள், சமுதாய பிரமுகர்களிடம் கலந்து பேசி வருகிறோம். சட்டத்தை மீறி செயல்படுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வெளியூரில் இருந்து யாராவது ஸ்டெர்லைட் சுற்று வட்டார கிராமங்களுக்கு வருகிறார்களா? என்பது குறித்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். மற்ற மாவட்டங்களில் இருந்து சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க வருகிறார்கள் என்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
Related Tags :
Next Story