ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசியல் கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டம் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு


ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசியல் கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டம் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 18 Dec 2018 5:00 AM IST (Updated: 17 Dec 2018 11:48 PM IST)
t-max-icont-min-icon

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று அரசியல் கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையொட்டி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆலை எதிர்ப்பாளர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் நேற்று காலை ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இதையொட்டி போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா மேற்பார்வையில் ஏராளமான போலீசார் கலெக்டர் அலுவலகத்தில் குவிக்கப்பட்டு இருந்தனர். கலெக்டர் அலுவலகத்தின் அனைத்து வாயில்களிலும் போலீசார் நிறுத்தப்பட்டு, தீவிர சோதனைகளுக்கு பிறகே மனு கொடுக்க வந்தவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு சட்டமன்றத்தை கூட்டி அவசர சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் ராஜா மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று தே.மு.தி.க. வினர் வடக்கு மாவட்ட செயலாளர் அழகர்சாமி, தெற்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார் ஆகியோர் தலைமையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கொள்கை முடிவு எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் நாம் தமிழர் கட்சியினர் மண்டல செயலாளர் இசக்கிதுரை தலைமையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்ற கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாவட்ட எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை செயலாளர் தொண்டன் சுப்பிரமணி தலைமையில் பேரவையினர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றக் கோரி ஒப்பாரி வைத்து அழுதபடி போராட்டம் நடத்தினர்.

பின்னர் அரசியல் கட்சியினர், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் தனித்தனியாக கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுக்களில் அவர்கள் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22 ஆண்டுகளாக மக்கள் போராடி வருகின்றனர். கடந்த மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் இறந்தனர். தொடர்ந்து ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது.

இந்த நிலையில் மீண்டும் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுச்சூழல் பாதிப்புகளை புறம்தள்ளி, ஆலையை மீண்டும் திறப்பதற்கு உத்தரவிட்டு இருப்பது ஏற்கதக்கது அல்ல. தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு சட்டமன்றத்தை உடனடியாக கூட்டி அவசர சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்.

இந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் அல்லது தூத்துக்குடி மக்களிடம் கருத்து கேட்டு வாக்கெடுப்பு நடத்த வேண்டும். ஆலை தொடர்பாக மக்கள் கருத்துக்களை அறிய வேண்டும். இதற்காக சிறப்பு கிராம சபையை கூட்டி மக்கள் கருத்துக்களை கேட்க வேண்டும். இது அரசின் நிலைப்பாட்டுக்கு வலு சேர்க்கும்.

இந்த ஆலையால் நிலத்தடி நீர் மாசுபட்டு பயன்படுத்த முடியாத அளவுக்கு உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த உத்தரவு மக்கள் மனதில் கலக்கத்தையும், பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஆகையால் மக்கள் நோயின்றி வாழவும், வருங்கால சந்ததியினரை நலமுடன் வாழ வைப்பதற்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

Next Story