வனப்பகுதியில் தாலுகா அலுவலகம் அமைக்க எதிர்ப்பு: கடையநல்லூரில் அனைத்து கட்சி சார்பில் 20-ந்தேதி ஆர்ப்பாட்டம் முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ. அறிவிப்பு
கடையநல்லூரில் வனப்பகுதியில் தாலுகா அலுவலகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சி சார்பில் வருகிற 20-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ. அறிவித்து உள்ளார்.
கடையநல்லூர்,
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடையநல்லூர் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிடும் வகையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் கடையநல்லூர் தாலுகா அறிவிக்கப்பட்டது. கடந்த 2015-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த தாலுகாவில் 2 நகராட்சி, 30 வருவாய் கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த தாலுகா அலுவலகம் தற்போது வேளாண்மை விற்பனை கூட வளாக பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் புதிய கட்டிடங்களுடன் கடையநல்லூர் நகர மையப்பகுதியிலேயே செயல்பட வேண்டும் என்று பொதுமக்களால் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் புதிய தாலுகா அலுவலகத்துக்கு வனப்பகுதியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி பள்ளி உள்ளிட்ட அரசு துறைகளின் கட்டிடங்கள் அமைந்துள்ள இடம் தேர்வு செய்யப்பட்டது. பின்னர் கடந்த 13-ந்தேதி புதிய தாலுகா அலுவலகம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.
வனப்பகுதியில் தாலுகா அலுவலகம் அமைக்க உள்ளதன் மூலம் இந்த பகுதியில் உள்ள 55 கிராம பொதுமக்களின் கோரிக்கை முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டு உள்ளது. எனவே வனப்பகுதிக்குள் தாலுகா அலுவலகத்தை கொண்டு செல்லும் தமிழக அரசை கண்டித்து அனைத்து கட்சி சார்பில் வருகிற 20-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 4.30 மணிக்கு கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story