தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் 3 பெண்கள் தீக்குளிக்க முயற்சி போலீசார் தடுத்து நிறுத்தினர்
தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற 2 குடும்பங்களை சேர்ந்த 3 பெண்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஆலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாப்பாத்தி (வயது 28). இவருடைய கணவர் செந்தில், டிரைவர். இவர் அண்மையில் கோபாலபுரம் சர்க்கரை ஆலை அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவர் விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஒருவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக செந்தில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டதாக அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினர் தரப்பில் புகார் எழுப்பினர்கள்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பாப்பாத்தி நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு தனது 2 குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினருடன் வந்தார். அங்கு கண் இமைக்கும் நேரத்தில் பாப்பாத்தியும், அவருடைய கணவரின் தங்கை மஞ்சுளவும் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அந்த பகுதியில் இருந்த போலீசார் உடனடியாக ஓடிச்சென்று பாப்பாத்தி, மஞ்சுளா ஆகியோரின் தீக்குளிப்பு முயற்சியை தடுத்து நிறுத்தினார்கள்.
இதுதொடர்பாக பாப்பாத்தி கூறுகையில், எங்கள் பகுதியில் உள்ள ஒருவரின் மாடு மீது எனது கணவர் சென்ற இருசக்கர வாகனம் மோதியது. இதுதொடர்பான தகராறில் அதேபகுதியை சேர்ந்த ஒருவர் எனது கணவரை கல்லால் தாக்கி படுகொலை செய்து உள்ளார். ஆனால் விபத்து என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படுகிறது.
இதுதொடர்பாக முறையாக விசாரணை நடத்தி எனது கணவரின் கொலைக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடடிக்கை எடுக்கவேண்டும். கணவரை இழந்து 2 குழந்தைகளுடன் வாழ்வாதாரமின்றி தவிக்கும் எனக்கு உரிய நீதி வழங்க வேண்டும் என்று கூறினார்.
இதேபோல்தர்மபுரி வட்டாரவளர்ச்சி காலனியை சேர்ந்த லட்சுமி(65) தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றார். அவரை அந்த பகுதியில் இருந்தவர்கள் தடுத்து நிறுத்தினார்கள். இதுதொடர்பாக அவர் கூறுகையில், வறுமை நிலையில் உள்ள நான் எனது கணவரின் பெற்றோர் வழங்கிய வீட்டில் வசித்த வருகிறேன். எங்கள் வீட்டின் அருகே வசிக்கும் 3 பேர் கார் நிறுத்த இடம் வேண்டும் என்று கூறி எங்களுக்கு சொந்தமான 5 அடி நிலத்தை பயன்படுத்தி கொண்டார்கள்.
இப்போது மேலும் சில அடி நிலம் தேவை எனக்கூறி எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் மிரட்டல் விடுத்து வருகிறார்கள். இதுதொடர்பாக தர்மபுரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தோம். இருந்தபோதிலும் மிரட்டல் தொடர்கிறது. எங்கள் நிலத்தை ஆக்கிரமித்து கொள்ள முயலுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தீக்குளிக்க முயன்றேன். அதற்குள் போலீசார் தடுத்து நிறுத்தி விட்டனர். எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறினார்.
தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்ட 3 பெண்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரை தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.