தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அரசியல் பின்னணி - கமல்ஹாசன் குற்றச்சாட்டு


தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அரசியல் பின்னணி - கமல்ஹாசன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 18 Dec 2018 3:45 AM IST (Updated: 18 Dec 2018 1:14 AM IST)
t-max-icont-min-icon

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்துள்ள தீர்ப்பில், அரசியல் பின்னணி உள்ளது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டி உள்ளார்.

திண்டுக்கல், 

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் திண்டுக்கல்லுக்கு வந்தார். நேற்று அவர் கொடைக்கானல், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் ‘கஜா’ புயல் தாக்கிய மலை கிராமங்களை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

இதையடுத்து அவர் திண்டுக்கல்லில் நிருபர்களிடம் கூறியதாவது:-

‘கஜா’ புயலால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டதை விட கொடைக்கானல் பகுதியில் பாதிப்பு சற்று குறைவு தான். இருந்தாலும் ஏழை மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். நிவாரண பணிகள் நடந்தாலும் அதில் முன்னேற்றம் இல்லை என்பது வருத்தமாக உள்ளது. இந்த பணிகள் முழுமையாக உடனே நடக்கக்கூடியது இல்லை என்றாலும், அரசின் வேகம் போதாது.

தமிழக அரசு ‘கஜா’ புயல் பாதிப்புக்கான நிவாரண நிதியை மத்திய அரசிடம் பயந்து கேட்காமல், அழுத்தம் கொடுத்து கேட்க வேண்டும். இந்தியாவில் வரி கட்டுவதில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. எனவே தமிழகத்துக்கு தேவையான நிதி முழுவதையும் மத்திய அரசு உடனே கொடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்துள்ள தீர்ப்பில், அரசியல் பின்னணி உள்ளது. தமிழகத்தை வியாபாரத்துக்காக தான் பயன்படுத்துகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்பது எங்கள் நோக்கம் அல்ல. மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாத இடத்தில் ஆலையை திறக்கலாம். சோனியாகாந்தி, மம்தாபானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரை சந்தித்தது மரியாதை நிமித்தமாக தான். கூட்டணி, எங்கள் நிலைப்பாடு குறித்து கட்சி நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்துவிட்டு தெரிவிப்போம். ஒட்டுமொத்த அரசியல் சூழலில் இருக்கும் ஊழலை முறியடிக்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story