‘மெரினா லூப் சாலையை பொது பயன்பாட்டு சாலையாக்க வேண்டும்’ மீனவ கிராமங்கள் சபை கூட்டத்தில் தீர்மானம்
‘சென்னை மெரினா லூப் சாலையை பொது பயன்பாட்டு சாலையாக அறிவிக்க வேண்டும்’, என்று மீனவ கிராமங்கள் சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை,
சென்னை மெரினா நொச்சிகுப்பத்தில் இருந்த மீனவர்களின் பயன்பாட்டு சாலை, ‘சென்னை மெரினா கடற்கரை அழகுபடுத்தும் திட்டம்’ அடிப்படையில் லூப் சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான 2.55 கி.மீ. தூரமுள்ள இச்சாலையை ரூ.47 கோடியில் சீரமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. சில நிபந்தனைகளுடன் கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் இதற்கு சம்மதித்தது.
இதையடுத்து லூப் சாலையில் உள்ள 300-க்கும் மேற்பட்ட மீன் கடைகளை பட்டினப்பாக்கத்துக்கு மாற்றம் செய்யப்போவதாக மாநகராட்சி அறிவித்தது. இதற்கு அங்குள்ள மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மீனவ கிராம சபை கூட்டம்
இந்தநிலையில் லூப் சாலை விவகாரம் தொடர்பாக மயிலை நொச்சிக்குப்பம் மீனவ கிராம சபை ஏற்பாட்டில் சென்னை கலங்கரை விளக்கம் அருகே மீனவ கிராமங்கள் சபையினரின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மயிலை நொச்சிக்குப்பம் மீனவ கிராம சபை தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் துணைத்தலைவர் கு.பாரதி முன்னிலை வகித்தார்.
திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம், அயோத்திக்குப்பம், நடுக்குப்பம், நொச்சிக்குப்பம், நொச்சிநகர், டுமிங்குப்பம், செல்வராஜ் கிராமம், பவானிக்குப்பம், நம்பிக்கை நகர், முல்லைமாநகர், சீனிவாசபுரம், ஊரூர் குப்பம், ஊரூர் ஆல்காட் குப்பம், ஓடைக்குப்பம், திருவான்மியூர் குப்பத்தை சேர்ந்த மீனவ கிராம சபையினர் பங்கேற்றனர்.
தீர்மானங்கள்
இந்த கூட்டம் குறித்து கு.பாரதி கூறியதாவது:-
நொச்சிக்குப்பம் கடற்கரை மீனவ மக்களின் பொது பயன்பாட்டு சாலையை அதிவிரைவு போக்குவரத்து சாலையாக மாற்றியதோடு, இப்போது அங்குள்ள மீன்கடைகளை மாற்றப்போவதாக மாநகராட்சி அறிவித்துள்ளதை ஏற்கவே முடியாது.
இன்றைய கூட்டத்தில் மெரினா லூப் சாலையை மீண்டும் பொது பயன்பாட்டு சாலையாக அறிவிக்க வேண்டும், சாந்தோம் நெடுஞ்சாலையை விரிவுபடுத்த வேண்டும், மீனவர்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டால் போராட்டங்கள் நடத்துவது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story