மாவட்ட செய்திகள்

மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் சேவை சாதித்தார் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறப்பு + "||" + Nirurumal service in Mohini decoration achieved in Srirangam Renganath temple

மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் சேவை சாதித்தார் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறப்பு

மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் சேவை சாதித்தார் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறப்பு
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. நேற்று இரவு மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் சேவை சாதித்தார். சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் குவிந்தனர்.
ஸ்ரீரங்கம்,

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடை பெறும் விழாக்களில் எல்லாம் முதன்மையானது வைகுண்ட ஏகாதசி விழாவாகும். பகல் பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 7-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. 8-ந்தேதியில் இருந்து நம்பெருமாள் தினமும் காலை மூலஸ்தானத்தில் இருந்து வெவ்வேறு அலங்காரங்களில் புறப்பாடாகி அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர் களுக்கு சேவை சாதித்து வந்தார்.


பகல் பத்து உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று காலை நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார். ஆழ்வார்கள், பக்தர்கள் புடை சூழ அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளிய நம்பெருமாள் அங்கு மாலை 5 மணி வரை பக்தர்களுக்கு சேவை சாதித்தார். பின்னர் கருடமண்டபத்தில் எழுந்தருளிய நம்பெருமாள் இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இந்த உலக வாழ்க்கை ஒரு மாயை. மோகினி அலங்காரத்தில் நம்பெருமாளை வழிபட்டால் இந்த மாயையில் இருந்து விடுபட்டதற்கான பலன் கிடைக்கும் என ஐதீகமாக நம்பப்படுவதால் நேற்று இரவு வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மோகினி அலங்காரத்தில் இருந்த நம்பெருமாளை தரிசித்தனர்.

வைகுண்ட ஏகாதசி விழாவின் சிகர நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு நடக்கிறது. பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருளுவதற்காக நம்பெருமாள் ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளி மாலை மற்றும் திருவாபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து அதிகாலை 4.15 மணிக்கு புறப்பாடாகிறார். சரியாக 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

சொர்க்கவாசல் வழியாக வெளியே வரும் நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள மணல் வெளி திருக்கொட்டகையில் அதிகாலை 5.45 மணிக்கு காட்சியளிக்கிறார். அப்போது அங்கு திரண்டிருக்கும் பக்தர்கள் மத்தியில் நம்பெருமாள் சுற்றி சுற்றி வந்து சேவை சாதிக்கிறார்.

இதனை தொடர்ந்து சாதரா மரியாதை அளிக்கப்பட்ட பின்னர் நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் காலை 8 மணிக்கு எழுந்தருளுகிறார். 8 மணி முதல் 8.45 மணி வரை அலங்காரம் அமுது செய்ய திரையிடப்படும். தொடர்ந்து காலை 8.45 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் நம்பெருமாளை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அரையர் சேவை நடைபெறும். இரவு 10.30 மணி முதல் 11 மணி வரை உபயகாரர் மரியாதை வழங்கப்படும். நள்ளிரவு 12 மணிக்கு நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் 19-ந்தேதி அதிகாலை 1.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். நம்பெருமாள் கடந்து செல்லும் பரமபதவாசல் இன்று இரவு 10 மணி வரை திறந்து இருக்கும். மூலவரை முத்தங்கியில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தரிசிக்கலாம்.

சொர்க்கவாசல் திறப்பையொட்டி திருச்சி மாவட்டத்தில் இருந்து மட்டும் இன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாது கோவில் வளாகத்தில் குவிந்து இருந்தனர். முக்கிய பிரமுகர்கள் மற்றும் சிறப்பு அனுமதி அட்டை பெற்று இருந்தவர்கள் கோவிலுக்குள் அதற்காக அமைக்கப்பட்டிருந்த தனி பாதைகள் வழியாக செல்வதற்கு அனுமதிக்கப்பட்டார்கள். இலவச தரிசனம் மற்றும் கட்டண தரிசனத்திற்காக வந்த பக்தர்கள் இரவில் இருந்தே நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.

நம்பெருமாள் சொர்க்கவாசலில் எழுந்தருளிய பின்னர் அந்த வழியாக சென்று அவரை தரிசிப்பதற்காகவும், மூலவரை முத்தங்கி சேவையில் தரிசனம் செய்வதற்காகவும் கோவில் பிரகாரங்களில் ஏராளமான பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து காத்து இருந்தனர்.

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி 236 அடி உயரம் கொண்ட ராஜகோபுரத்தின் அடிப்பாகத்தில் இருந்து உச்சி வரை மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு உள்ளது. அனைத்து கோபுரங்கள் மற்றும் மதில்சுவர் எல்லாம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. மொத்தத்தில் புண்ணிய பூமியாம் ஸ்ரீரங்கம் நகரமே விழாக்கோலம் பூண்டு உள்ளது. பக்தர்களை ஒழுங்கு படுத்தி, நெரிசல் இன்றி அவர்கள் தரிசனம் செய்வதற்கு வசதியாக சுமார் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

ராப்பத்து உற்சவத்தின் இரண்டாம் நாளான நாளை (புதன்கிழமை) நண்பகல் 12 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி பிற்பகல் 2.30 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளுகிறார். இதே போல் ராப்பத்து உற்சவம் முடியும் வரை எழுந்தருளுவார். வருகிற 24-ந்தேதி திருக்கைத்தல சேவையும், 25-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 27-ந்தேதி தீர்த்தவாரியும் நடக்கிறது. 28-ந்தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது.

விழா ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் வேணு சீனிவாசன் தலைமையில் அறங்காவலர்கள் மற்றும் இணை ஆணையர் ஜெயராமன் மேற்பார்வையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து உள்ளனர்.