தினக்கூலியை ரூ.400 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் குறைதீர்வு நாள் கூட்டத்தில் டெங்கு களப்பணியாளர்கள் மனு
டெங்கு களப்பணியாளர்கள் தங்களுக்கான தினக்கூலியை ரூ.280-லிருந்து ரூ.400 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். இதில் அரசின் பல்வேறு துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் விதவை உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, வீட்டு மனைபட்டா, ரேஷன் அட்டை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் உபகரணங்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அவற்றை அனுப்பி கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
கூட்டத்தில் போளூர் ஒன்றியம் களம்பூர் வட்டார மருத்துவமனைக்கு உட்பட்ட டெங்கு களப்பணியாளர்கள் கலெக்டரிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
களம்பூர் வட்டார மருத்துவமனையை சேர்ந்த கேளூர், திருச்சூர்பேட்டை, சந்தவாசல், காளசமுத்திரம், வாழியூர் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளாக டெங்கு களப்பணியாளர்களாக தினக்கூலி அடிப்படையில் வேலைபார்த்து வருகிறோம்.
இதுவரை எங்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. தினக்கூலியும் உயர்வு செய்யப்படவில்லை. நாங்கள் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் காலை 6 மணிக்கு வேலைக்கு வர வேண்டி உள்ளது. இந்த தினக்கூலி எங்கள் குடும்பத்திற்கு போதவில்லை. எனவே, தற்போது வழங்கப்படும் தினக்கூலி ரூ.280-ஐ ரூ.400-ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story